பாலாறு வடிநில கோட்ட பாசன சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு

பாலாறு வடிநில கோட்ட பாசன சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
பொள்ளாச்சி
பாலாறு வடிநில கோட்ட பாசன சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
பதவி ஏற்பு
பாலாறு வடிநில கோட்டத்தில் உள்ள 21 பாசன சங்க தலைவர்கள், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் சங்கத்தில் 21 பேர் தலைவராகவும், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினராக 124 பேரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் இதுவரைக்கும் நீர்பங்கீடு விவசாயிகளின் ஆதரவோடு அதிகாரிகள் செய்து வந்தனர்.
இனி அதிகாரிகளின் ஆதரவுடன் புதிதாக தெர்ந்தெடுக்கப்பட்ட பாசன சங்க தலைவர்கள் நீர்பங்கீடு செய்ய உள்ளனர். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதிமொழி வாசிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இதை தொடர்ந்து ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். இதில் செயற்பொறியாளர் ரவி மற்றும் உதவி பொறியாளர்கள், பாசன சங்க தலைவர்கள், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முன்னாள் திருமூர்த்தி நீர் தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் பேசும்போது கூறியதாவது:-
விவசாயிகள் நம்பிக்கை
கடந்த 2014-ம் ஆண்டு பாசன சங்க தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் தேர்தலை நடத்தாததால் சென்னை, மதுரை ஐகோர்ட்டில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட்டு அரசிடம் எதிர்வாதம் கேட்ட போது, வாதம் வேண்டாம் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது. அதன்படி தற்போது தேர்தல் நடத்தப்பட்டு பாசன சங்க தலைவர்களிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. சட்டப்படி நீர்பங்கீடு செய்வதற்கு தகுதி வாய்ந்த அதிகாரம் உதவி பொறியாளருக்கு உள்ளது. சங்க கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்த வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. இதேபோன்று பகிர்மான குழுவிற்கு செயற்பொறியாளரும், திட்டக்குழுவிற்கு கண்காணிப்பு பொறியாளர் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடைமடை வரை அனைத்து விவசாயிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல முயற்சி எடுக்க வேண்டும். விவசாயிகள் நம்மை நம்பி வாக்களித்து உள்ளனர். அவர்களின் நம்பிக்கையை வீணாக்கி விடக் கூடாது. சங்கத்திற்கு தேவையான நிதியை அரசிடம் கேட்டு பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






