மாமல்லபுரத்தில் கடல் திடீரென உள்வாங்கியது

மாமல்லபுரத்தில் கடல் திடீரென உள்வாங்கியது.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில் உலக பாரம்பரிய நினைவு சின்னமாக திகழ்கிறது. இந்த கோவிலை சுற்றி கற்கள் கொட்டப்பட்டு கடல் அரிப்பிலும், ராட்சத அலை தாக்காத வகையிலும் தொல்லியல் துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகில் திடீரென 500 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியது.
அப்போது இடிபாடுகளில் சிதைந்து உருக்குலைந்த கோவில்களின் கருங்கற்கள், தூண்கள், செங்கற்கள், கோவில் உச்சியில் அமைக்கப்படும் கருங்கல் ஸ்தூபிகள் தென்பட்டன. 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தை துறைமுகப்பட்டினமாகவும், காஞ்சீபுரத்தை தலைநகராகவும் கொண்டு ஆட்சி செய்தபோது மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, புலிக்குகை உள்ளிட்ட கட்டுமான கோவில்களை தென்னிந்திய சிற்பக்கலை பாணியில் வடிவமைத்து செதுக்கி வைத்தனர்.
குறிப்பாக கடற்கரை கோவில் வடிவமைத்தபோது 1000 மீட்டர் தூரத்தில் கடல் பின்னோக்கி இருந்ததாக கூறப்படுறது. அப்போது முதலாம் நரசிம்ம பல்லவ மன்னனால் சில சிறிய கோவில்கள் அங்கு கட்டப்பட்டதாகவும், காலப்போக்கில் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் கடல் முன்னோக்கி வந்தபோது அந்த கோவில்கள் கடலில் மூழ்கி விட்டதாக வரலாறு தெரிவிக்கிறது.
தற்போது தென்பட்டுள்ள தூண்கள், ஸ்தூபிகள், செங்கற்கள் போன்றவை கடலில் மூழ்கி இடிந்த கோவில்களின் துகள்களாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் வந்து ஆய்வு செய்த பின்னரே இவை கட்டப்பட்ட ஆண்டு மற்றும் எந்த கோவில் என்பது போன்ற விவரங்கள் தெரிய வரும் என்று மாமல்லபுரம் சிற்ப கலைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






