வால்பாறையில் காட்டு யானைகள் துரத்தியதில் தவறி விழுந்து வேட்டை தடுப்பு காவலர் பலி


வால்பாறையில் காட்டு யானைகள் துரத்தியதில் தவறி விழுந்து வேட்டை தடுப்பு காவலர் பலி
x
தினத்தந்தி 21 April 2022 7:07 PM IST (Updated: 21 April 2022 7:07 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் ரோந்து சென்றபோது காட்டு யானைகள் துரத்தியதில் தவறி விழுந்து வேட்டை தடுப்பு காவலர் பரிதாபமாக இறந்தார்.

வால்பாறை

வால்பாறையில் ரோந்து சென்றபோது காட்டு யானைகள் துரத்தியதில் தவறி விழுந்து வேட்டை தடுப்பு காவலர் பரிதாபமாக இறந்தார். 

காட்டு யானைகள் விரட்டின

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகம் மந்திரி மட்டம் என்ற வனச்சுற்று பகுதிக்குள் வனத்துறையினர் மற்றும் வனப்பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். 
அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் வெளியேறின. இந்த யானைகள், வனத்துறையினரை கண்டதும் திடீரென அவர்களை நோக்கி வேகமாக ஓடிவந்தன.  இதனால் அதிர்ச்சி அடைந்த வன ஊழியர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். 

மயங்கி விழுந்த வேட்டைத்தடுப்பு காவலர்

அப்போது வன ஊழியர்கள் அனைவரும் சற்று தூரம் ஓடியபின்பு வனப்பகுதியில் உள்ள புதர்மறைவில் மறைந்து உயிர்தப்பினார்கள். 
இதையடுத்து அந்த காட்டு யானைகள் அங்கிருந்து சென்று விட்டன. இதில் ரோந்து பணியிலிருந்த வேட்டைத்தடுப்பு காவலர் ரவிச்சந்திரன் (வயது 46) என்பவரும் யானையிடமிருந்து தப்பி ஓடினார். அப்போது ரவிச்சந்திரன் நிலை தடுமாறி கீழே விழுந்து மயங்கினார். இதனை கவனித்த மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு மானாம்பள்ளி மின் வாரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

சாவு

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு  ரவிச்சந்திரனின் உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வனப் பணியாளர்கள் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் கணேசனுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் அங்கு சென்று, விசாரணை நடத்தினார். ரவிச்சந்திரனின் உடல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரக பகுதியில் பெரும் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இறந்த ரவிச்சந்திரனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
1 More update

Next Story