கூனங்குப்பம் அரசு பள்ளியில் கதை சொல்லி கல்வி கற்பிக்கும் திட்டம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
கூனங்குப்பம் அரசு பள்ளியில் கதை சொல்லி கல்வி கற்பிக்கும் திட்டத்தை கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தை சேர்ந்த பழவேற்காடு கூனங்குப்பம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் கதைசொல்லி கல்வி கற்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த பழவேற்காடு கூனங்குப்பம் தொடக்கப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த பள்ளியில் மடிக்கணினி, கம்ப்யூட்டர், விளையாட்டு உபகரணங்கள், கேமராக்கள் மற்றும் அன்றாடம் பயன்படுத்த உதவும் கருவிகள், சைக்கிள், நாற்காலி உள்பட பல்வேறு வகையான பொருட்களை மாணவ-மாணவிகளுக்கு சொல்லி எளிதில் புரிய வைக்கும் ஆய்வகம் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலர் மோகனா முன்னிலை வகித்தனர். பத்மஸ்ரீ விருது பெற்ற கீதாதர்மராஜ் அனைவரையும் வரவேற்றார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் தலைமை தாங்கி கதா மேஜிக் ஆய்வகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பேசினார்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் கதைசொல்லி கல்வி கற்பிக்கும் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் முதன் முதலாக மீஞ்சூர் ஒன்றியத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் கூனங்குப்பம் கதா மேஜிக் ஆய்வகத்தை திறந்து வைத்துள்ளது போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வழகி எர்ணாவூரன், தமின்ஷா, பள்ளி தலைமை ஆசிரியை முருகம்மை மற்றும் கூனங்குப்பம் கிராம நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story