கஞ்சா கடத்திய கணவன், மனைவி கைது
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று அதிகாலை சென்னை யானை கவுனி போலீசார் காத்திருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த குறிப்பிட்ட ஒரு காரை அவர்கள் மடக்கி பிடிக்க முயன்றனர்.
போலீசாரை கண்டதும் அந்த கார், அங்கு இருந்த இரும்பு தடுப்புகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனையடுத்து உள்ளூர் போலீசாரின் துணையோடு சென்னை போலீசார் அந்த காரை தங்களது வாகனத்தில் துரத்தி சென்றனர்.
இந்த நிலையில் போலீசாருக்கு போக்கு காண்பித்த அந்த கார் பல்வேறு வழிகளில் டிமிக்கி கொடுத்து சென்றது. ஒரு கட்டத்தில் போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முடியாது என எண்ணிய அந்த கார் டிரைவர் கவரைப்பேட்டை அடுத்த கீழ்முதலம்பேடு செல்லும் சாலையில் காரை நிறுத்தினார். பின்னர் அதில் இருந்து ஒரு பெண் உள்பட 2 பேர் தப்பி ஓட முயன்றனர்.
தப்பி ஓட முயன்றவர்களை போலீசார் மடக்கி பிடித்து காரில் சோதனை செய்த போது அதில் 15 பாக்கெட்டுகளில் மொத்தம் 30 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காரை ஓட்டி வந்த சென்னை மண்ணடியை சேர்ந்த முகமது நவுசத் அலி (வயது 35) மற்றும் அவரது மனைவி ஆயிஷா (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்யப்பட்ட கணவன், மனைவியை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story