வேலூரில் மீன்களின் விலை அதிகரிப்பு
வரத்து குறைவு காரணமாக வேலூரில் மீன்களின் விலை அதிகரித்தது.
வேலூர்
வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது. அதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ரெயில், டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் விற்பனைக்காக மீன்கள் வரவழைக்கப்படுகின்றன. வழக்கமாக பண்டிகை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவு மீன்கள் விற்பனையாகும்.
இந்த நாட்களில் மீன்மார்க்கெட்டிற்கு 20 முதல் 30 டன் மீன்கள் வரத்து காணப்படும். தற்போது மீன்களின் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்து 5 டன் மீன்களே வந்தன. வஞ்சிரம், மத்தி, நெத்திலி, சங்கரா, நண்டு உள்ளிட்டவை வரவில்லை. விறால் கிலோ ரூ.600-க்கும், கடல் பாறை ரூ.400-க்கும், இறால் ரூ.350-க்கும், கட்லா ரூ.100-க்கும் விற்பனையானது.
மீன்வரத்து குறைவு, விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் வழக்கத்தைவிட பொதுமக்களின் கூட்டம் மீன்மார்க்கெட்டில் குறைவாக காணப்பட்டது. விற்பனைக்கு வந்த மீன்கள் விலை அதிகமாக காணப்பட்டாலும் அவை விற்றுத்தீர்ந்தன என்று மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story