விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
பெரியகுளத்தில் விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். கார் டிரைவர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை போலீஸ் நிலைய பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் பலியானார்.
இதைத்தொடர்ந்து அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் குடும்பத்தினர் விபத்து நஷ்டஈடு வழங்கக்கோரி கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக பணிமனை மீது பெரியகுளம் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி, 2016-ம் ஆண்டு நஷ்டஈடாக ரூ.23 லட்சத்து 65 ஆயிரம் வழங்க உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இதுவரை நஷ்டஈடு தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தற்போதைய நீதிபதி சிங்கராஜ், கோவை மண்டல அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் கோர்ட்டு அமீனா ரமேஷ் மற்றும் பாதிக்கப்பட்டவரின் வக்கீல் பரமேஸ்வரன் ஆகியோர் நேற்று பெரியகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தேனிக்கு செல்ல தயாராக இருந்த கோவை மண்டல அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பஸ்சை கோர்ட்டுக்கு எடுத்து சென்று ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story