தாய், மகள் தீக்குளிக்க முயற்சி


தாய், மகள் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 25 April 2022 8:42 PM GMT (Updated: 2022-04-26T02:12:18+05:30)

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயன்றதால், அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர்.

சேலம்:-
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயன்றதால், அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர்.
தீக்குளிக்க முயற்சி
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது சேலம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த விஜியா (வயது 45), தனது மகள் மகேஸ்வரியுடன் (20) சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
நுழைவு வாயில் அருகே வந்த போது விஜியா கேனில் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை திடீரென தனது மற்றும் மகளின் உடலில் ஊற்றினார். அப்போது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சொத்து பிரச்சினை
இதையடுத்து விஜியா, மகேஸ்வரியை டவுன் போலீஸ் நிலையத்துக்கு ஆட்டோவில் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் விஜியா கூறும் போது, நான் கணவரால் கைவிடப்பட்டவர். இந்த நிலையில் எனக்கு சொந்தமான பூர்வீக சொத்தை உறவினர்கள் கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். மேலும் அவர்கள், தற்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டையும் காலி செய்யுமாறு கூறி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை இதனால் மனமுடைந்த நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் கலெக்டர் அலுவலகம் வந்ததாக தெரிவித்தார். இதனிடையே விஜியா, மகேஸ்வரி மீது போலீசார் தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story