அம்பத்தூரில் வாலிபர் வெட்டிக்கொலை
அம்பத்தூரில் முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திரு.வி.க. நகர்,
சென்னை அம்பத்தூர் சிவானந்த நகர் பகுதியில் வசித்து வந்தவர் லோகேஷ் என்ற கார்த்திக் (வயது 27). இவர், அம்பத்தூர் எஸ்டேட் கலைவாணர் நகரில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வந்தார். இவருடைய தம்பி வெங்கடேஷ் (21). நேற்று காலை வழக்கம்போல் லோகேஷ் கடையில் இருந்தார். அவரை பார்ப்பதற்காக அவருடைய தம்பி வெங்கடேசும் கடைக்கு வந்து இருந்தார். அப்போது கடைக்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அண்ணன்-தம்பி இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த லோகேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த வெட்டுக்காயம் அடைந்த வெங்கடேஷ், அங்கிருந்து தப்பி ஓடி உயிர் தப்பினார். இதுபற்றி அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கடந்த வாரம் அதே பகுதியை சேர்ந்த லாசர் (20) என்பவர் வெங்கடேஷ் மற்றும் லோகேசிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அப்போது அண்ணன்-தம்பி இருவரும் சேர்ந்து லாசரை கைகளால் தாக்கி விரட்டி அடித்தனர்.
இந்த முன்விரோதம் காரணமாக லாசர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து லோகேசை வெட்டிக்கொன்றது தெரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாசர், அவரது நண்பர்களான சண்முகம் (19), நரேந்திரன் (19) ராஜசேகர் (22), சதீஷ் (21) மணிகண்டன் (19), சக்தி (19), விஷ்ணு (20) மற்றும் 2 சிறுவர்கள் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story