தாலுகா அலுவலகத்துக்கு ஒதுக்கிய இடத்தில் ஆக்கிரமிப்பு - ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு
வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த ரூ.50 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டபோது வண்டலூர் தாலுகா அலுவலகமும், புதிதாக உதயமானது. தற்போது வண்டலூர் தாலுகா அலுவலகம், வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள ஊராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தில் இயங்கி வருகிறது. இதற்கிடையே, புதியதாக வண்டலூர் தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்கு, வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள இடத்தை அரசு தேர்வு செய்தது. புதிதாக தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை, சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டிடங்கள், கடைகள் போன்றவற்றை கட்டி இருந்தனர். இதனால், வண்டலூர் தாலுகா அலுவலகத்துக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு காலதாமதம் ஆனது. இந்நிலையில், வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை, இடித்து அகற்ற செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, நேற்று வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த்துறையினர், 3 பொக்லைன் எந்திரத்துடன் சென்று வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டப்பட உள்ள இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர். இதுகுறித்து வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
வண்டலூர் தாலுகாவிற்கு புதிய அலுவலக கட்டிடங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடித்து 1¾ ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. தற்போதைய இந்த இடத்தில், சந்தை மதிப்பு ரூ.50 கோடி ஆகும். இதனையடுத்து மீட்கக்கப்பட்ட இடத்தில், வண்டலூர் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக மிக விரைவில் பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story