வாலிபர் குத்திக்கொலை
வாலிபர் குத்திக்கொலை
கோவை
கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள பழைய தோட்டத்தை சேர்ந்தவர் கொசு என்ற சந்தோஷ் (வயது 34). இவர் மீது அடிதடி, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சுண்டக்கடலை சுரேஷ் (28), வசந்த் (32), பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து சுற்றுவது வழக்கம்.
இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்து பாண்டி (23), சூர்யா (29), சுருக்கிளி என்ற சுரேஷ் (27), சுபாஷ் என்ற மாப்பிள்ளை (23), பாஸ் என்ற பாஸ்கரன் (24) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து உள்ளது. இதில் முத்து பாண்டி என்பவர் சந்தோஷின் உறவினரை தாக்கியதாக வழக்கு உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் முத்து பாண்டியின் மனைவி டி.கே.மார்க்கெட் பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த வசந்த் மற்றும் பிரகாஷ் செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
மேற்கண்ட சம்பவங்களால் இரு கோஷ்டிகளுக்கும் இடையே முன்விரோதம் முற்றியது. இதனிடையே கொசு என்ற சந்தோஷை செல்போனில் தொடர்பு கொண்ட முத்துபாண்டி சமாதானம் பேச அழைத்து உள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் உக்கடத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு ஆட்டோவில் கெம்பட்டி காலனி நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை பிரகாஷ் ஓட்டியுள்ளார்.
அப்போது முத்துபாண்டி மீண்டும் சந்தோசை தொடர்பு கொண்டு சமதானம் பேச அழைத்து உள்ளார். இதையடுத்து சந்தோஷ் உள்பட 4 பேரும் கெம்பட்டி காலனிக்கு சென்றனர். அங்கு தயாராக இருந்த முத்து பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் சமாதானம் பேசுவது போல் நடித்து திடீரென்று சந்தோஷ் கண்ணில் மிளகாய் பொடி தூவினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உஷாராவதற்குள் 5 பேர் கொண்ட அந்த கும்பல் அவரை கத்தியால் குத்தியது. மேலும் அவரது நண்பரான சுண்டக்கடலை சுரேஷை அரிவாளால் வெட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்த் மற்றும் பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடினர்.
படுகாயமடைந்த சந்தோஷ் மற்றும் சுண்டக்கடலை சுரேஷ் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து சுண்டக்கடலை சுரேசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோஷ்டி மோதலில் வாலிபரை சமாதானம் பேச அழைத்து படுகொலை செய்த சம்பவம் கோவையில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story