கலெக்டர் அலுவலகம் முன் மகன், மகளுடன் பெண் தர்ணா


கலெக்டர் அலுவலகம் முன் மகன், மகளுடன் பெண் தர்ணா
x
கலெக்டர் அலுவலகம் முன் மகன், மகளுடன் பெண் தர்ணா
தினத்தந்தி 27 April 2022 8:34 PM IST (Updated: 27 April 2022 8:34 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகம் முன் மகன்மகளுடன் பெண் தர்ணா

கோவை

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மனைவி நதியா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதில் மகன் பட்டப்படிப்பும், மகள் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நதியா நேற்று காலை தனது மகன் மற்றும் மகளுடன் கோவை கலெக்டர் அலுவலகம் வந்தார்.

பின்னர் அவர்கள் 3 பேரும் திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்  அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் 3 பேரும் கலெக்டர் சமீரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

நான்  மகன் மற்றும் மகளுடன் கடந்த 9 ஆண்டுகளாக நத்தம்புறம்போக்கு இடத்தில் தகர கொட்டகை அமைத்து குடியிருந்து வருகிறேன். ஆனால் எனக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. எனது மகனும், மகளும் படித்து வருவதால் இரவு நேரத்தில் மின்விளக்கு இல்லாததால் படிக்க முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள்.

எங்கள் வீட்டுக்கு மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் மின்வாரிய அதிகாரிகள் மின்இணைப்பு வழங்க மறுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக நான் ஏற்கனவே தங்களிடம் மனு கொடுத்து இருந்தேன். எனவே தாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்து எனது வீட்டிற்கு மின்இணைப்பு கொடுக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Next Story