கணவர் கழுத்தை நெரித்து கொலை- டியூசன் ஆசிரியை, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த டியூசன் ஆசிரியை, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தின்தோஷி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
மும்பை,
கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த டியூசன் ஆசிரியை, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தின்தோஷி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
டியூசன் ஆசிரியர்
மும்பை சாக்கிநாக்கா பகுதியை சேர்ந்தவர் பாபு செல்வம். இவரது மனைவி ரிபா (வயது42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரிபா டியூசன் வகுப்பு நடத்தி வந்தார். இந்தநிலையில் ரிபாவிற்கு அதே பகுதியை சேர்ந்த அஜய் சவுத்ரி (30) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
இது பற்றி அறிந்த கணவர் பாபு செல்வம் மனைவியை கண்டித்து உள்ளார். இதனால் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை கொலை செய்ய ரிபா திட்டம் போட்டார்.
கழுத்தை நெரித்து கொலை
கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந் தேதி இரவு கள்ளக்காதலன் அஜய் சவுத்ரியை தனது வீட்டிற்கு வரவழைத்தார். அவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவர் பாபு செல்வமை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இதற்கு உடந்தையாக மனைவி ரிபா இருந்தார்.
இந்தநிலையில் மூத்த மகன் இரவு பணியை முடித்து விட்டு காலையில் வீட்டிற்கு வந்தார். தந்தை பாபு செல்வம் வெகுநேரமாக அசையாமல் கிடந்ததால் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆயுள் தண்டனை
தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் சம்பவத்தன்று அஜய் சவுத்ரி வீட்டிற்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரிபாவிடம் போலீசார் விசாரித்ததில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தின்தோஷி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது 2 பேரின் மீதான குற்றங்கள் கோர்ட்டில் நிரூபணமானது. இதனை தொடர்ந்து நேற்று நீதிபதி எஸ்.யூ பகாலே, ரிபா மற்றும் அஜய் சவுத்ரிக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தும் தீர்ப்பு அளித்தார்.
Related Tags :
Next Story