நடைபயிற்சி செல்பவர்களை அச்சுறுத்தும் நாய்கள்


நடைபயிற்சி செல்பவர்களை அச்சுறுத்தும் நாய்கள்
x

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செல்பவர்களை தெருநாய்கள் அச்சுறுத்தி வருகின்றன.

கோவை

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செல்பவர்களை தெருநாய்கள்  அச்சுறுத்தி வருகின்றன.

ரேஸ்கோர்ஸ் நடைபாதை

கோவை மாநகரின் இதய பகுதியாக ரேஸ்கோர்ஸ் விளங்கி வருகிறது. இங்குள்ள நடைபயிற்சி செல்லும் பகுதியில்தான் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி, ஐ.ஜி., போலீஸ் கமிஷனர் உள்பட உயர் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களும், குடியிருப்பு பகுதியும் உள்ளது. இங்குள்ள நடைபயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக அதிகாலையில் இருந்தே இங்கு நடைபயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அதிகாலை 5 மணியில் இருந்தே இங்கு பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதை பார்க்க முடியும். அதுபோன்று இரவு 12 மணிவரை நடைபயிற்சி செல்வார்கள். இதனால் இந்த பகுதியை தூங்கா நடைபாதை என்று கூறுவதும் உண்டு.

தெருநாய்கள் தொல்லை

இந்த நடைபாதையை உயர் அதிகாரிகள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு தெருநாய்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. 

கூட்டங்கூட்டமாக ஜாலியாக சுற்றித்திரியும் தெருநாய்கள், அங்கு நடைபயிற்சி மேற்கொள்பவர்களை துரத்துகிறது. இதனால் நடைபயிற்சி செல்பவர்கள் தலைதெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அதுபோன்று சில நேரத்தில் அங்கு திரியும் தெருநாய்கள் ஒன்றுக்கொன்று சண்டைபோட்டுக்கொண்டு நடைபயிற்சி செல்பவர்கள் மீதும் பாய்ந்து அவர்களை கீழே விழவும் வைக்கிறது. இதன் காரணமாக அங்கு நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் பயத்துடன் சென்று வருகிறார்கள். 

குறிப்பாக சிலர் அங்கு நடைபயிற்சி செல்வது உண்டு. இதற்காக அவர்கள் மெதுவாக ஓடுவதால் அவர்களையும் இந்த தெருநாய்கள் விட்டுவைப்பது இல்லை.
இது குறித்து நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் கூறியதாவது:-

கருத்தடை செய்வது இல்லை

இந்த நடைபாதையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. முன்பெல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்வார்கள். இதற்காக நாய்களை பிடிக்கும் வாகனமும் தெருக்களில் சுற்றுவது உண்டு.

 தற்போது அதுபோன்ற வாகனங்களை எங்கும் பார்த்தது இல்லை. அத்துடன் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்வதும் குறைந்துவிட்டது.
இதன் காரணமாக தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்து அதன் தொல்லை பெருகிவிட்டது. தெருக்களில் ஜாலியாக உலா வரும் அவைகள், வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதுடன், குறுக்கேயும் சென்று விழுகிறது. 

இதனால் பலர் விபத்தில் சிக்கி உயிரிழப்பது உண்டு. ரேஸ்கோர்ஸ் நடைபாதையிலும் இதுபோன்றுதான் நடந்து வருகிறது.

கட்டுப்படுத்த வேண்டும்

நடைபயிற்சி மேற்கொள்பவர்களின் குறுக்கே வந்து விழுவதுடன், அவர்களை துரத்தியும் கடிக்கிறது. அதுபோன்று அதன் அருகே செல்லும் சாலையின் குறுக்கே ஓடுவதால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயங்களுடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது.

இந்த நாய்கள் நடமாட்டத்தை இந்த வழியாக செல்லும் அதிகாரிகள் பார்த்துவிட்டுதான் செல்கிறார்கள். ஆனால் அதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக மாநகராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. 

எனவே இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக இங்கு சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story