போலி ஆவணம் தயாரித்து சொத்தை அபகரிக்க முயற்சி; முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 11 பேர் கைது
போலி ஆவணம் தயாரித்து, சொத்தை அபகரிக்க முயற்சித்த முன்னாளர் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
நிலத்தை அபகரிக்க முயற்சி
சென்னையை ஒட்டியுள்ள நாவலூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சாந்தகுமாரி. இவர் தனது தாய் வீட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற 13 சென்ட் நிலத்தில் கட்டடம் கட்டி மதில் சுவர் எழுப்பி குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாவலூர் ரகு போலி ஆவணம் தயாரித்து, அடியாட்களை கொண்டு சாந்தகுமாரிக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சித்ததாக தெரிகிறது.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாவலூர் ரகு அடியாட்களை வைத்து தன் மீது திராவகம் ஊற்றி மிரட்டுகிறார். பொக்லைன் எந்திரங்கள் கொண்டு நிலத்துக்கான சுற்றுச்சுவரை சேதப்படுத்தி, வீட்டில் இருந்த 75 பவுன் நகை, ரூ.7 லட்சத்தை திருடி சென்று விட்டார் என்று, தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் சாந்தகுமாரி புகார் செய்திருந்தார்.
கைது
ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டதாக தெரிகிறது
இதுகுறித்து, சாந்தகுமாரி செங்கல்பட்டு கோர்ட்டை அணுகிய பின்னர், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, நாவலூர் ஊராட்சி மன்ற தலைவர் ரகு உள்பட 11 பேரையும் சென்னை ஐகோர்ட்டு, செங்கல்பட்டு கோர்ட்டில் சரணடைய சொல்லி தீர்ப்பு வழங்கியது. அவர்கள் முன்ஜாமீன் பெறுவதற்காக செங்கல்பட்டு கோர்ட்டை அணுகியபோது, செங்கல்பட்டு டவுன் போலீசார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரகு உள்பட 11 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story