பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பு
வால்பாறை பகுதியில் கோடைமழையால் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இதனால் எந்திரம் மூலம் இலை பறிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வால்பாறை
வால்பாறை பகுதியில் கோடைமழையால் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இதனால் எந்திரம் மூலம் இலை பறிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நோய் தாக்குதல்
வால்பாறை பகுதியில் வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குறைந்து வெயில் காலம் தொடங்கும். இந்த சமயத்தில் தேயிலை செடிகளை சிவப்பு சிலந்தி, தேயிலை கொசு மற்றும் கொப்பள நோய் தாக்க தொடங்கி விடும்.
மேலும் வறட்சி காரணமாக தேயிலை செடிகளும் காய்ந்து விடும். இதனால் அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கும். தோட்ட நிர்வாகங்கள் ஏப்ரல், மே மாதங்களில் தேயிலை செடிகளை வறட்சியில் இருந்து பாதுகாக்க தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளித்து வருவார்கள்.
மகசூல் அதிகரிப்பு
ஆனால் இந்த ஆண்டு வால்பாறை பகுதியில் மார்ச் மாதத்தின் இறுதியில் இருந்தே தொடர்ந்து மழை கிடைத்து வந்தது. அதன்பிறகும் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.
சில நேரங்களில் பலத்த மழையாகவும் கொட்டுகிறது. இதனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் பச்சை தேயிலை பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மகிழ்ச்சி
எனினும் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சமாளிக்க எஸ்டேட் நிர்வாகங்கள் எந்திரங்களை பயன்படுத்தி தீவிரமாக பச்சை தேயிலை பறித்து வருகின்றனர். இந்த எந்திரங்கள் மூலம் அதிகப்படியான பச்சை தேயிலையை குறைந்த தொழிலாளர்களை கொண்டு பறிக்க முடிகிறது.
இந்த ஆண்டு பெய்து வரும் கோடைமழையானது தேயிலை செடிகளையும் காப்பாற்றி, பச்சை தேயிலை உற்பத்தியையும் அதிகரித்து கொடுத்து வருவதால் தேயிலை தோட்ட நிர்வாகங்களும், தேயிலை விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story