குப்பையை சாலையில் வீசினால் அபராதம்
பொள்ளாச்சியில் குப்பையை சாலையில் வீசினால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் குப்பையை சாலையில் வீசினால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கடைக்காரருக்கு அபராதம்
பொள்ளாச்சி வெங்கடேசா காலனி பகுதியில் நகராட்சி தலைவர் சியாமளா, ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் இன்று காலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு கடைக்காரர் குப்பையை சாலையில் வீசியதாக தெரிகிறது.
இதை பார்த்த தலைவரும், ஆணையாளரும் அங்கு சென்று கடைக்காருக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டனர். மேலும் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த பழக்கூடைகளை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுத்தனர்.
சுகாதார சீர்கேடு
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கப்படுகிறது. பொதுமக்கள் மக்கும், மக்காத குப்பையை பிரித்து பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆனால் பெரும்பாலானோர் குப்பையை தரம் பிரித்து கொடுப்பதில்லை. சிலர் குப்பையை சாலையில் வீசி ஏறிகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
‘சீல்’ வைக்க நடவடிக்கை
வெங்கடேசா காலனியில் குப்பையை சாலையில் வீசிய கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த பழக்கூடைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பழக்கடைகாரருக்கும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் நகரை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். சாலையில் குப்பையை வீசினால் முதற்கட்டமாக அபராதம் விதிக்கப்படும். பின்னர் கடைகளை பூட்டி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story