தோப்புகளில் குவிந்து கிடக்கும் தேங்காய்கள்
கிணத்துக்கடவு பகுதியில் விலை வீழ்ச்சியால் தோப்புகளில் தேங்காய்கள் குவிந்து கிடக்கிறது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் விலை வீழ்ச்சியால் தோப்புகளில் தேங்காய்கள் குவிந்து கிடக்கிறது.
தென்னை விவசாயம்
கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தென்னை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் கிணத்துக்கடவு பகுதியில் உற்பத்தியான தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்து வந்தது. ஒரு கிலோ கருப்பு நிற தேங்காய் 30 ரூபாய்க்கும், வெள்ளை நிற தேங்காய் 29 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், உரிய விலை இல்லாதது அவர்கள் மட்டுமின்றி வியாபாரிகளுக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மலைபோல் குவித்து...
இதனால் கிணத்துக்கடவு பகுதியில் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் தேங்காய்களை கொள்முதல் செய்து, தோட்டத்தில் மலைபோல் குவித்து வைத்து உள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
கொரோனா காலக்கட்டத்தில் தேங்காய்க்கு கடும் கிராக்கி இருந்தது. தற்போது உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், திடீரென விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஒரு கிலோ கருப்பு தேங்காய் 26 ரூபாய் 50 பைசாவுக்கும், வெள்ளை தேங்காய் 25 ரூபாய் 50 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. உரிய விலை கிடைக்காததால் தேங்காய்களை வாங்கி தோட்டத்திலே குவித்து வைத்துள்ளோம்.
விலை நிர்ணயம்
இதற்கிடையில் கொப்பரை தேங்காய்க்கு ஒரு கிலோ 105 ரூபாய் 90 பைசா விலை நிர்ணயம் செய்து, அரசு கொள்முதல் செய்து வருகிறது. குறிப்பிட்ட அளவே கொள்முதல் செய்வதால், சிரமம் அடைந்து வருகிறோம். எனவே கொப்பரை தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்தது போன்று, பச்சை தேங்காய்க்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story