சிதைந்து கிடக்கும் சாலைகள் சீராகுமா?
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சிதைந்து கிடக்கும் சாலைகள் சீராகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வால்பாறை
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சிதைந்து கிடக்கும் சாலைகள் சீராகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பழுதடைந்த சாலைகள்
வால்பாறை பகுதியில் 120 கிலோ மீட்டர் தூர சாலைகள் மட்டும் நெடுஞ்சாலைதுறையின் சாலைகளாக உள்ளது. இந்த சாலைகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட்டு, வாகன போக்குவரத்திற்கு தகுதியான சாலைகளாக இருக்கிறது.
அதில் ஒருசில சாலைகள் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் நகராட்சி நிர்வாகம், மின்வாரியம் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு சொந்தமான சாலைகள் பழுதடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக அரசு பஸ்கள் சென்று வரக்கூடிய சாலைகள் மிகவும் பழுதடைந்து உள்ளன.
சேக்கல்முடி எஸ்டேட்
இந்த சாலைகளை சீரமைத்து தரக்கோரி எஸ்டேட் தொழிலாளர்கள், வாகன ஒட்டிகள், சுற்றுலா பயணிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போக்கு காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் உருளிக்கல் எஸ்டேட்டில் வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து மானாம்பள்ளி எஸ்டேட் வரை செல்லும் சாலை, சோலையாறு நகர் பகுதியில் இருந்து கலியாணபந்தல் எஸ்டேட் வரை செல்லும் மின்வாரிய சாலை, சேக்கல்முடி எஸ்டேட்டில் இருந்து சேக்கல்முடி புதுக்காடு எஸ்டேட் வரை செல்லும் சாலை, சோலையார் எஸ்டேட் பகுதியில் இருந்து தோணிமுடி எஸ்டேட் வரை செல்லும் சாலை மற்றும் வெள்ளமலை, ஊசிமலை, வெள்ளமலைடாப், வேவர்லி எஸ்டேட், முக்கோட்டுமுடி, பெரியகல்லார், ரயான் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் சிதைந்து கிடக்கிறது.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பழுதடைந்த சாலைகளில் தினமும் இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்கள் அவ்வப்போது பழுதடைந்து விடுகிறது.
அவற்றின் உதிரி பாகங்கள் விரைவில் தேய்ந்து விடுவதால் போக்குவரத்துக்கழகத்திற்கு அதிகளவில் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட விரைவாக செல்ல முடிவதில்லை. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.
நகராட்சி நிர்வாகம், போக்குவரத்துதுறை, அரசு போக்குவரத்துகழக அதிகாரிகள் இணைந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் சாலைகளை ஆய்வு செய்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன் சீரமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story