மின் கம்பங்கள் விழுந்து வீடுகள் சேதம்


மின் கம்பங்கள் விழுந்து வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 30 April 2022 8:20 PM IST (Updated: 30 April 2022 8:20 PM IST)
t-max-icont-min-icon

சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு மேற்கூரைகள் பறந்தன. மேலும் மின் கம்பங்கள் விழுந்ததில் வீடுகள் சேதமடைந்தன.

பொள்ளாச்சி

சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு மேற்கூரைகள் பறந்தன. மேலும் மின் கம்பங்கள் விழுந்ததில் வீடுகள் சேதமடைந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் உயிர்தப்பினர்.

சூறாவளி காற்றுடன் மழை

பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழைக்கு இடையே வீசிய சூறாவளி காற்றுக்கு ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. பொள்ளாசசி சி.டி.சி.மேடு அண்ணா காலனி அருகில் உள்ள தனியார் இடத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

இந்த வளாகத்தில் தொழிலாளர்கள் தங்குவதற்கு தனியாக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. பலத்த காற்று வீசியதால் கட்டிடத்தின் மேற்கூரை, கம்பிகள் காற்றில் பறந்து அண்ணா காலனியில் உள்ள வீடுகளில் விழுந்தன.

 இதில் பயங்கர சத்தத்துடன் ஓடுகள் விழுந்ததால் குழந்தைகள், பெண்கள் பயத்தில் சத்தம் போட்டனர். மேலும் தகர மேற்கூரைகள் சுமார் 100 மீட்டர் தூரம் வரை பறந்து சென்று விழுந்தன.

வீடுகள் மீது விழுந்த மின்கம்பங்கள்

இதற்கிடையில் மேற்கூரை மற்றும் மரம் அந்த வழியாக சென்ற உயர்அழுத்த மின் கம்பிகள் மீது விழுந்ததில் மின் கம்பங்கள் வீடுகள் மீது விழுந்தன. இதில் வீடுகள் சேதமடைந்தன.

மின் கம்பங்கள் விழுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்வாரிய அதிகாரிகள் மின் வினியோகத்தை துண்டித்தனர். இதன் காரணமாக மின் கம்பம் விழுந்த போது பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து மின் கம்பம் விழுந்த வீடுகளில் வசித்தவர்கள் அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று தஞ்சம் புகுந்தனர்.

மின்சாரம் இல்லாமல் தவித்த மக்கள்

இதற்கிடையில் மின்சாரம் இல்லாததால் விடிய, விடிய தூங்காமல் பொதுமக்கள் தவித்தனர். இதை தொடர்ந்து நேற்று காலை மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் வந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். புதிதாக மின் கம்பங்கள் மாற்றப்பட்டன. இதை தொடர்ந்து சுமார் 18 மணி நேரம் கழித்து வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டது.

அண்ணா காலனி வழியாக 22 ஆயிரம் வோல்ட் கொண்ட உயர்அழுத்த மின் கம்பி செல்கிறது. நல்லவேளையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காற்றில் பறந்த தகர சீட்டுகள்

இதேபோன்று அதே பகுதியில் மரம் சாய்ந்து விழுந்ததில் மின்சார ஓயர்கள் அறுந்து விழுந்தன. இதன் காரணமாக மின்கம்பம் முறிந்து விழுந்தது. மேலும் ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டிடம் கட்டும் பகுதியில் தடுப்பு சுவருக்கு பதிலாக தற்காலிகமாக வைக்கப்பட்டு இருந்த தகர சீட்டுகள் காற்றில் பறந்தன.

 மேலும் பலத்த மழையின் காரணமாக கோவை ரோட்டில் இருந்து தமிழ்மணி நகருக்கு வரும் சாலை குப்பைகளாக காட்சி அளித்தது. இதேபோன்று சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொள்ளாச்சியில் அதிகபட்சமாக 23 மி.மீ. மழை பதிவானது.

Next Story