தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சாலை
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவுவாயில் அருகே செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக இருக்கிறது. சாலையை சரி செய்து சீரான போக்குவரத்துக்கு வழிவகுக்க வேண்டும்.
- ஜோன்ஸ், தாம்பரம்.
அசம்பாவிதம் தவிர்க்கப்படுமா?
சென்னை தரமணி கனகம் நேரு தெருவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்புகளில் உள்ள சில வீடுகள் பழுடைந்து பராமரிப்பின்றி இருக்கிறது. சமீபத்தில் ஒரு வீட்டின் மேல் கூரை இடிந்து கீழே விழுந்து விட்டது. எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு பழுதடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டுகிறோம்.
- அன்பழகன், தரமணி.
ஆபத்தான மழைநீர் வடிகால்வாய்
சென்னை சூளைமேடு பகுதியிலுள்ள சிவன் கோவில் தெருவில் இருக்கும் மழைநீர் வடிகால்வாயின் மூடி சேதமடைந்து காட்சியளிக்கிறது. நடைமேடையில் ஆபத்தாக இருக்கும் இந்த வடிகால்வாய் பொதுமக்களுக்கு ஆபத்தாக உள்ளது. எனவே சேதமடைந்த கால்வாய் மூடியை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
- பொதுமக்கள்.
குவியும் குப்பைகளால் தொந்தரவு
சென்னை பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகர் பகுதியில் இருக்கும் காலி இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மேலும் கொட்டப்படும் குப்பைகள் அப்புறப்படுத்தாத காரணத்தினால் குப்பை மேடாக காட்சி அளிப்பதோடு இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது. எனவே குப்பைகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- தெருமக்கள்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னை ஆவடி, நியூ மிலிட்டரி ரோட்டில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் எதிரே இருக்கும் பாதாள சாக்கடை திறந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. 2 சாலைகள் சேரும் இடத்தில் இருக்கும் இந்த பாதாள சாக்கடை திறந்த நிலையில் இருப்பதால், பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் கவனித்து பாதாள சாக்கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுந்தர், ஆவடி.
கண்டுகொள்ளப்படாத ஆபத்து
சென்னை புதுவண்ணார்பேட்டை எல்.ஐ.ஜி. காலனி 1-வது லேன் பகுதியில் அடிபம்பு ஒன்று உள்ளது. இதனை ஒட்டியுள்ள பகுதியில் மரக்கிளைகள், இலைதழைகள் போன்றவைகளோடு மரக்கழிவுகள் சேர்ந்து கிடப்பதால் இந்த இடம் எலி மற்றும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வருகிறது. அடிபம்பில் குடிநீர் பிடிக்க வரும் பொதுமக்களுக்கு அச்சத்தை விளைவிக்கும் வகையில் இருப்பதால் அதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விநாயகம், புதுவண்ணார்பேட்டை.
சாலையை கடப்பதில் சிரமம்
காஞ்சீபுரம் மாவட்டம் காமராஜ் நகர் பொன்னேரி அம்மன் கோவில் அருகே இருக்கும் நெடுஞ்சாலையில், போக்குவரத்து சிக்னல் விளக்குகள் இல்லை. இதனால் சாலையை கடந்து செல்வதற்கு பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்படுகின்றனர். சாலைவாசிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.
- சரவணன், காமராஜ் நகர்.
நிரந்தர தீர்வு வேண்டும்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரில் உள்ள பகுதிகளில் சாலையை ஒட்டி குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. இதே பகுதியில் குப்பை தொட்டி வசதி இருந்தும் யாரும் குப்பை தொட்டிகளை பயன்படுத்தாமல், சாலையிலேயே கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியே துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடுக்கு வழிவகுக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இதற்கொரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
- கவுரிசங்கர், ஆவடி.
தடுப்புச்சுவர் நிலை மாறுமா?
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் நெடுகுன்றம் காந்தி மெயின் ரோட்டில் உள்ள பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்து உள்ளது. இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணம் செய்யும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி சேதமடைந்த பாலத்தின் தடுப்புச்சுவரை விரைவில் சீரமைக்க வேண்டுகிறோம்.
- ராம், காட்டாங்கொளத்தூர்.
அடிபம்பின் உடைந்த கைப்பிடி
சென்னை பள்ளிக்கரணை விவேகானந்தர் நகர் 2-வது மெயின் ரோட்டில் உள்ள அடிபம்பின் கைப்பிடி உடைந்துள்ளது. குடிநீர் எடுக்க முடியாமல் இப்பகுதி மக்கள் சிரமப்படுகிறார்கள். கைப்பிடியை சரி செய்து தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
- சேதுராமன், பள்ளிக்கரணை.
Related Tags :
Next Story