‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 2 May 2022 8:13 PM IST (Updated: 2 May 2022 8:13 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பழுதான தார்சாலை

கிணத்துக்கடவில் இருந்து கொண்டம்பட்டி செல்லும் வழியில் உள்ள ெரயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் உள்ள தார்சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். எனவே அங்கு விபத்துகளை தடுக்க பழுதடைந்த அந்த தார்சாலையை சீரமைக்க தர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

முருகன், கிணத்துக்கடவு.

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி
குடிநீர் வினியோகம் சீரானது

கோத்தகிரி சேட் லைன், ஹேப்பிவேலி பகுதியில் ஒரு வார காலமாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார் பழுது நீக்கப்பட்டு குடியிருப்புகளுக்கு சீராக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.

நந்தகுமார், கோத்தகிரி.

மின்கம்பம் மாற்றப்படுமா?

கூடலூர் குசுமகிரி முருகன் கோவில் எதிரே செல்லும் நடைபாதையில் மிகவும் பழுதடைந்த நிலையில் ஆபத்தான மின் கம்பம் உள்ளது. இது எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாயத்தில் காணப்படுகிறது. பெண்கள், மாணவ-மாணவிகள் அதிகளவில் நடந்து செல்லும் பாதை என்பதால் அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே கூடலூர் பகுதியில் அவ்வப்போது காற்றுடன் மழை பெய்கிறது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் பழைய மின்கம்பகத்தை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பத்தை நட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலாயுதன், கூடலூர்.

புகையிலை விற்பனை அதிகரிப்பு

பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. குறிப்பாக பெட்டிக்கடைகளில் விற்பனை களைகட்டுகிறது. இது மாணவர்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. எனவே எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வர்கள் மீது போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜ்குமார், பொள்ளாச்சி.

முட்புதர்கள் அகற்றப்படுமா?

கூடலூர் ஐந்துமுனை சந்திப்பில் இருந்து ஆர்.டி.ஓ. மற்றும் தாலுகா அலுவலகத்திற்கு செல்லும் சாலையின் இடதுபுறம் தனியார் பள்ளிக்கூட வளாகத்தை ஒட்டி அடர்ந்த முட்புதர்கள் காணப்படுகிறது. இது விஷ ஜந்துகளின் புகலிடமாக காணப்படுகிறது. அந்த புதர் செடிகளை அகற்றினால் அந்த வழியாக காலை, மாலை வேளைகளில் பள்ளிக்கூடங்களுக்கு சென்று வீடு திரும்பும் மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல போதிய இடவசதி கிடைக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹரி, கூடலூர்.

பஸ்சை முறையாக இயக்க வேண்டும்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு அரசு பஸ் செல்கிறது. பின்னர் அங்கிருந்து மீண்டும் கூடலூர் வழியாக நிலம்பூருக்கு இயக்கப்படுகிறது. இதனால் தமிழக-கேரள மக்கள் மிகுந்த பயன் அடைந்து வந்தனர். ஆனால் அந்த பஸ் சரிவர முறையாக இயக்கப்படுவதில்லை. நேர அட்டவணையை கூட பின்பற்றுவது இல்லை. இதனால் அந்த பஸ்சை எதிர்பார்த்து காத்திருக்கும் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பஸ்சை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமது, கூடலூர்.

தெருநாய்கள் தொல்லை

கோவை ராமநாதபுரம், காவிரி நகர், 80 அடி ரோடு, சுங்கம் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரங்களில் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை விரட்டுகிறது. மேலும் நடந்து செல்லும் பெண்கள் உள்பட பொதுமக்களையும் துரத்துகிறது. இதனால் அவர்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலையும், நாய்க்கடிக்கு ஆளாகும் நிலையும் உள்ளது. இதனால் அந்த வழியாக சென்று வர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சகாயமாதா, சுங்கம்.


மூடப்பட்ட நுழைவு வாயில்

கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகம் வழியாக, அருகில் உள்ள அரசுப்பள்ளி மற்றும் குடியிருப்புகளுக்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் நடந்து சென்று வந்தனர். தற்போது திடீரென அலுவலக வளாகத்தில் உள்ள சிறிய நுழைவுவாயில் மூடப்பட்டு உள்ளது. இதனால் அனைவரும் மாற்றுப்பாதை வழியாக 200 மீட்டர் சுற்றி செல்ல வேண்டி இருக்கிறது. இதன் காரணமாக மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நலன் கருதி நுழைவு வாயிலை மீண்டும் திறந்து விட வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணி, கோத்தகிரி.

Next Story