போரிவிலியில் கோவிலில் காவலாளியை கொன்று கொள்ளையடித்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை- செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
கோவிலில் காவலாளியை கொன்று கொள்ளையடித்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை
மும்பை,
போரிவிலியில் காவலாளியை கொன்று கோவிலில் கொள்ளையடித்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்சு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கோவிலில் கொள்ளை
மும்பை போரிவிலியில் நந்தீஸ்வரர் திகம்பர் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேபாள நாட்டை சேர்ந்த தேவி சிங், ராஜேஷ் ஜோஷி ஆகிய 2 பேர் காவலாளியாக வேலை பார்த்து வந்தனர். கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி 9 பேர் கொண்ட கும்பல் கோவில் வளாகத்தில் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றனர். இதனை கண்ட காவலாளிகள் 2 பேரும் சேர்ந்து கொள்ளை முயற்சியை தடுக்க முயன்றனர். இதில் ஆத்திரமடைந்த கொள்ளை கும்பல் 2 பேரையும் பிடித்து சரமாரியாக தாக்கியது.
காவலாளி சாவு
இதில் காவலாளி தேவி சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
பின்னர் கோவிலில் இருந்த பஞ்சலோக சிலைகள், 22 வெள்ளி குடைகள் உள்பட ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளை அடித்துவிட்டு தப்பி சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த காவலாளியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிர் பிழைத்த காவலாளி சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
9 பேர் கைது
இந்தநிலையில் இந்த கொள்ளையில் தொடர்புடைய கோரேகாவை சேர்ந்த ஹாருன் சேக், ரமேஷ் பாட்டீல், சந்தோஷ் போயிர், ராஜ்குரு சிங், மற்றும் நவிமும்பையை சேர்ந்த சுரேஷ் குப்தா, வினோத் குமார் யாதவ், விக்கி தப்பா, முகேஷ் குமார் உள்பட 9 பேரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந் தேதி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளை அடித்த பொருட்களை மீட்டனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட 9 பேர் மீதும் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
3 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த வழக்கில் 30 பேர் அவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்தனர். வழக்கு விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட 2 பேர் உயிரிழந்தனர். மற்ற 7 பேர் மீது நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்தது. நேற்று கோர்ட்டில் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஹாருண் சேக், ரமேஷ் பாட்டீல், சந்தோஷ் போயிர் ஆகிய 3 பேர் மீதான குற்றம் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் சுரேஷ் குப்தா, வினோத்குமார் யாதவ், விக்கி தப்பா, முகேஷ்குமார் யாதவ் ஆகிய 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story