அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு
மதுரையில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது தவறி விழுந்ததில் பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
மதுரை,
மதுரையில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது தவறி விழுந்ததில் பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
ஆஸ்பத்திரி பெண் ஊழியர்
மதுரை வில்லாபுரம் போக்குவரத்து நகரை சேர்ந்தவர் சுரேஷ், அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தனமாலினி (வயது 43), தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை இருவரும் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வில்லாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்த முயன்ற போது, மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதில் கணவன், மனைவி இருவரும் கீழே விழுந்தனர்.
பஸ் சக்கரம் ஏறியதில் சாவு
கண் இமைக்கும் நேரத்தில் தனமாலினி உடல் மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். தன் கண்முன்னே மனைவி பலியானதை அறிந்து சுரேஷ் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
சம்பவம் பற்றி அறிந்ததும் போக்குவரத்து உதவி கமிஷனர் திருமலைக்குமார், இன்ஸ்பெக்டர் தங்கபாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அவர்கள் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து டவுன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவர் கண் முன்பு மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story