தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ் -அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ்கள் நின்று செல்லுமா?
கோவை ஒண்டிப்புதூர் அருகே காமாட்சிபுரம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக அன்றாடம் வேலைக்கு செல்லும் பெண் தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே போக்குவரத்துக்கழக அதிகாரிகள் காமாட்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாண்டுரங்கன், காமாட்சிபுரம்.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டது
கோவை கணபதி மணியக்காரபாளையம் பிரிவில் உள்ள சிக்னலில் சாலை ஓரத்தில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் குடிநீர் வீணாக சென்றது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு பள்ளம் தோண்டி குடிநீ£ குழாயை சரிசெய்ததுடன் அந்த பள்ளத்தையும் கான்கிரீட் போட்டு மூடினார்கள். எனவே மக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
மனோகரன், கணபதி.
தார்சாலை வேண்டும்
கோவை ராமநாதபுரம் கருப்பண்ணசுவாமி கோவில் வீதியில் உள்ள சாலை பழுதடைந்து மண் ரோடு போல் காட்சி அளிக்கிறது. மேலும் மேடும், பள்ளங்களாக உள்ளதால் அனைத்து வாகனங்களும் தட்டுத்தடுமாறி செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும், நடந்து செல்லும் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ளையப்பன், ராமநாதபுரம்.
நாய்கள் தொல்லை
பொள்ளாச்சி புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள வெங்கடேசா காலனி மற்றும் உழவர் சந்தை ரோடு, நகராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் ஒன்றுக்கொண்டு சண்டையிட்டபடி பொதுமக்கள் மீது விழுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். குறிப்பாக பெண்களை துரத்துவதோடு, வாகன ஓட்டிகளையும் விரட்டுகிறது. இதனால் அவாகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
காளிமுத்து, பொள்ளாச்சி.
சாலையோரத்தில் மண் குவியல்
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரங்களில் சிலர் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட மண்ணை கொண்டு வந்து இரவு நேரத்தில் கொட்டி விட்டுச் செல்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படவும், மண் கொட்டப்படும் பகுதியில் செல்லும் ஓடையில் மண் அடைந்து, ஓடையின் நீரோட்டம் தடைபடும் வாய்ப்பும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்ணை அனுமதியின்றி கொட்டி விட்டுச் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ஜே.ராஜு, கோத்தகிரி.
குவிந்து கிடக்கும் ஜல்லி கற்கள்
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் தட்டப்பள்ளம் அருகில் பல நாட்களாக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இந்த ஜல்லிக்கற்கள் சாலையோரமாக குவிந்து கிடந்தாலும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் அடிக்கடி அங்கு விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே பேராபத்துகள் ஏற்படுவதற்குள் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் ஜல்லி கற்களை உடனடியாக அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வருவார்களா?.
மோகன், கோத்தகிரி.
விபத்து அபாயம்
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை ஒட்டி உள்ள நடைபாதையில் கேபிள் வயர் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனை ஒரு இரும்பு தடுப்பில் கட்டி வைத்துள்ளனர். இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கால் இடறி கீழே விழுந்து காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.
செல்வம், காட்டூர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
கோவை சிங்காநல்லூர் 61-வது வார்டு பகுதியில் ஒருசிலர் தார்சாலையை ஆக்கிரமித்து உள்ளார்கள். இதனால் அந்த சாலையோரமாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு வாகன விபத்துகளும் அரங்கேற வாய்ப்பு உள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் அச்சமின்றி நடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்மேகம், சிங்காநல்லூர்.
வாகன ஓட்டிகள் அவதி
நெகமம் பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் ரோடுகளில் கற்கள் மற்றும் மண் அதிகளவில் சிதறி கிடைக்கிறது. இதன்காரணமாக சாலை பழுதடைய வாய்ப்பு உள்ளது. மேலும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். அதனால் வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட துறை நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராதாகிருஷ்ணன், செட்டியக்காபாளையம்.
Related Tags :
Next Story