காதல் திருமணம் செய்த 9 மாதத்தில் ஆயுதங்களால் தாக்கி மருந்து கடை உரிமையாளர் கொலை


காதல் திருமணம் செய்த 9 மாதத்தில் ஆயுதங்களால் தாக்கி மருந்து கடை உரிமையாளர் கொலை
x
தினத்தந்தி 4 May 2022 2:40 AM IST (Updated: 4 May 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்த 9 மாதத்தில் ஆயுதங்களால் தாக்கி மருந்து கடை உரிமையாளர் படுகொலை செய்யப்பட்டார்.

பெலகாவி:பெலகாவி மாவட்டம் காக்வாட் தாலுகா கத்ரா கிராமத்தை சேர்ந்தவர் சிந்தாமணி பண்டேகார்(வயது 26). இவர் தீப்தி என்ற இளம்பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தற்போது தீப்தி 5 மாத கர்ப்பமாக உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஐனாபுரா என்ற கிராமத்தில் சிந்தாமணி மருந்து கடை தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மருந்து கடையை பூட்டிவிட்டு ஐனாபுராவில் இருந்து கத்ரா நோக்கி சிந்தாமணி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்மநபர்கள் சிந்தாமணியை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் காக்வாட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிந்தாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து காக்வாட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story