தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின் இணைப்பு பெட்டி
சென்னை பெரம்பூர் சாமியார் மடம் சந்திரயோகி சமாதி ரோட்டில் உள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. மின் இணைப்பு பெட்டியில் உள்ள வயர்கள் வெளியே தொங்கிகொண்டு இருப்பதால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு மின் வாரிய அதிகாரிகள் இதை சரி செய்ய வேண்டும்.
- சாமுவேல், பெரம்பூர்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
சென்னை அயனாவரம் என்.எம்.கே. தெருவில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறிவருகிறது. இப்படி வெளியேறும் கழிவுநீர் சாலையிலேயே தங்கி விடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்றுக்கும் வழி வகுக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதை சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
- கஸ்தூரி, அயனாவரம்.
சாலையை ஆக்கிரமிக்கும் கழிவுநீர்
சென்னை மடிப்பாக்கம் பாரத் நகர் சாய்பாபா தெருவில் உள்ள கழிவுநீர் வடிகால்வாய் சேதமடைந்து கழிவு நீர் கசிந்து வெளியேறுகிறது. ஆனால் அதை சரி செய்யாமலே அதன் மேலே சாலை போட்டுள்ளனர். இதனால் கழிவு நீர் வெளியேறி சாலையை ஆக்கிரமித்து வருகிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
- பெரியசாமி, மடிப்பாக்கம்.
காய்கறி கழிவுகளால் துர்நாற்றம்
சென்னை நன்மங்கலம் ஏரி அருகே குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த இடத்தில் தேங்கி இருக்கும் காய்கறி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேட்டுக்கும் வழி வகுக்கிறது. இந்த இடத்தை கடந்து செல்லும் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் இருப்பதால் விரைவில் குப்பைகள் அகற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நவீன் வாசுதேவன், நன்மங்கலம்.
சேதமடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?
சென்னை புழல் மற்றும் காவாங்கரை பகுதியை இணைக்கும் இந்த பாலம் புழல் ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த பாலம் சேதமடைந்துள்ளதோடு இதன் ஓரத்தில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டு அதை தற்காலிகமாக மண் கொட்டி மூடி வைத்துள்ளனர். எனவே விபத்து எதுவும் ஏற்படும் முன்பு பாலத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
- சுந்தரம், புழல்.
மின் விசிறி இருந்தும் பயனில்லை
சென்னை வில்லிவாக்கம் ரெயில் நிலையம் நடைமேடை 2-இல் இருக்கும் மின் விசிறி நீண்ட நாட்களாக ஓடவில்லை. மேலும் அங்கிருக்கும் வேறு சில மின் விசிறிகளும் பயணிகள் அமரும் இடத்திற்கு மேலே இல்லாமல் வேறு இடத்தில் இருக்கிறது. தற்போது வெயில் காலம் என்பதால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மின் விசிறியை பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். ரெயில்வே நிர்வாகம் கவனித்து மின்விசிறியை சரி செய்யுமா?
- பயணிகள்.
தேங்கியிருக்கும் கழிவுநீர், தீர்வு எப்போது?
சென்னை முகப்பேர் கிழக்கு நொளம்பூர் பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகில் கழிவு நீர் தேங்கி உள்ளது. நாளுக்கு நாள் இந்த பிரச்சினை அதிகரித்துக்கொண்டே இருப்பதால், தெருவில் வாகனங்கள் செல்லவும், பாதசாரிகள் நடந்து செல்லவும் சிரமமாக இருக்கிறது. மேலும் இந்த சாலையை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பொத்தி கொண்டு செல்லும் சூழலும் ஏற்படுகிறது. எனவே தேங்கியிருக்கும் கழிவுநீரை முழுவதுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவம், நொளம்பூர்.
பெயர் பலகையும்; விளம்பர அட்டையும்
சென்னை ஆர்.கே. நகர் மணலிச்சாலை மெயின் ரோட்டில் உள்ள முனீஸ்வரர் நகர் 2-வது தெருவின் பெயர் பலகையில் விளம்பர அட்டைகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இதனால் தெரு பெயர்கள் மறைக்கப்படுவதோடு கூரியர் கொடுக்க வருபவர்கள் மற்றும் தெருவுக்கு புதிதாக வருபவர்களும் சிரமப்படும் சூழல் ஏற்படுகிறது. தெரு பெயர் பலகைகளில் விளம்பர அட்டைகள் ஒட்டப்படுவது நிரந்தரமாக தடுக்கப்படுமா?
- பாண்டியன், ஆர்.கே. நகர்.
விபத்து ஏற்படும் அபாயம்
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் சாலையில் மாடுகள் ஆங்காங்கே படுத்துக் கிடப்பதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் விபத்தில் சிக்குவதும் அடிக்கடி நடக்கிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜா, பெரும்பாக்கம்.
பள்ளி அருகே வேகத்தை குறைக்கலாமே!
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரும்புலியூர் மாம்பாக்கம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் அருகே இருக்கும் சாலையில் செல்லும் லாரிகளும், பஸ்சுகளும் அதிக வேகத்தில் வருவதால் இந்த சாலையை பயன்படுத்தவே பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் அச்சப்படுகிறார்கள். சமீபத்தில் கூட பள்ளி நுழைவுவாயில் அருகே உள்ள மின்கம்பத்தில் லாரி மோதியது. ஆனால் அந்த சமயத்தில் மாணவர்கள் யாரும் அங்கே இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே பயணம் செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
- நாகராஜ், காஞ்சீபுரம்.
Related Tags :
Next Story