பிளஸ்-2 பொதுத்தேர்வை 4,871 மாணவர்கள் எழுதுகின்றனர்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வை 4871 மாணவர்கள் எழுதுகிறார்கள். 36 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மொத்தம் 4,871 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 24 தேர்வு மையங்களும், தனி தேர்வர்களுக்கு லதாங்கி மெட்ரிக் பள்ளி தேர்வு மையமாக அமைக்கப்பட்டு உள்ளது.
தேர்வில் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க முதன்மை அறை கண்காணிப்பாளர்கள் 24 பேரும், அறை கண்காணிப்பாளர்கள் 323 பேரும், பறக்கும் படையினர் 36 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தேர்வு மையங்களில் தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது. மாணவர்களின் ஹால் டிக்கெட் எண்ணை மேஜையில் ஆசிரியர்கள் ஒட்டினர்.
குடிநீர், மின்சாரம்
இதுகுறித்து பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் ராஜசேகரன் கூறியதாவது:- பிளஸ்-2 தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குடிநீர், மின்சார வசதி உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வினாத்தாள்களை நன்றாக படித்து விடை எழுத வேண்டும். தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே வர வேண்டும்.
பறக்கும் படையினர் திடீரென்று தேர்வு மையங்களில் சோதனை மேற்கொள்வார்கள்.
இதை தவிர நிலையான பறக்கும் படையும் அமைக்கப்பட்டு உள்ளது. மாணவ-மாணவிகள் தேர்வில் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி மகாலிங்கபுரம் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகளுக்கு சீல் வைத்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story