எல்.ஐ.சி. ஊழியர்கள் 2 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டம்
எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பதை கண்டித்து ஊழியர்கள் 2 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
வேலைநிறுத்த போராட்டம்
எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்து உள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் எல்.ஐ.சி. ஊழியர்கள் 2 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் அறவித்தனர். பொள்ளாச்சி-கோவை ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. கிளை முன்பு ஊழியர்கள் காலை 11.30 மணிக்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் அலுவலகத்திற்கு வெளியே வந்து மத்திய அரசை கண்டித்து வேைலநிறுத்தம் செய்தனர். போராட்டத்துக்கு சங்க தலைவர் சையது அலி தலைமை தாங்கினார். எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்ட்டது.
இதில் செயலாளர் ஐஸ்டின் லாரன்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பாலக்காடு ரோட்டில் உள்ள கிளை முன் எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க கிளை தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கைவிட வேண்டும்
வேலை நிறுத்தம் காரணமாக எல்.ஐ.சி. அலுவலகத்திற்கு காப்பீட்டு தொகை செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வந்த பொதுமக்கள் ஊழியர்கள் இன்றி சிரமப்பட்டனர். இதுகுறித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் கூறும்போது,
எல்.ஐ.சி. பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்ய உள்ளது. இதை கண்டித்து காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story