புறப்படுமா பூங்கா ரெயில்....?
கோவை வ.உ.சி. சிறுவர் பூங்காவில் பூங்கா ரெயில் புறப்படுமா என்று பொதுமக்கள் காத்துள்ளனர்.
கோவை
கோவை மக்களின் பொழுதுபோக்காக இருப்பது பூங்காக்களும், தியேட்டர்களும்தான். இதனால் விடுமுறை நாட்களில் கோவையில் உள்ள அனைத்து பூங்கா மற்றும் தியேட்டர்கள் நிரம்பி வழியும்.
அந்த வகையில் கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கோவை வ.உ.சி. தாவரவியல் பூங்காவில் சிறுவர்கள் ரெயில் உள்ளது. இந்த ரெயில் அங்குள்ள புள்ளி மான்கள், கடமான்கள் அடைக்கப்பட்டு இருக்கும் பகுதி வழியாக சுற்றிச்செல்லும். செல்லும் வழியில் குகை வடிவில் அமைக்கப்பட்டு இருப்பதால் மலைப்பிரதேசத்துக்குள் சென்று வந்த அனுபவம் கிடைக்கும்.
மூடப்பட்டது
இதனால் இந்த சிறுவர்கள் ரெயிலில் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் சென்று மகிழ்ந்தனர். விடுமுறை நாட்களில் இதில் செல்ல நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பூங்காக்கள் மூடப்பட்டபோது இந்த சிறுவர்கள் ரெயில் பகுதியும் மூடப்பட்டது.
இதற்கிடையே கொரோனா பரவல் குறைந்ததால் மீண்டும் பூங்காக்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டன. ஆனால் வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி தேசிய உயிரியல் பூங்கா ஆணையம் அனுமதியை ரத்து செய்தது. இதனால் அந்த பூங்கா இதுவரை திறக்கப்படவில்லை. ஆனால் அதை ஒட்டி உள்ள தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டு உள்ளது. அங்குதான் சிறுவர்கள் ரெயிலும் உள்ளது.
பொதுமக்கள் ஏமாற்றம்
ஆனால் அந்த ரெயில் இருக்கும் இடத்தைதான் இன்னும் மாநகராட்சி அதிகாரிகள் திறக்கவில்லை. அத்துடன் அங்கு ஓடிக்கொண்டு இருந்த சிறுவர்கள் ரெயில் அங்குள்ள குகைக்குள் நிறுத்தப்பட்டு உள்ளது. அதை பார்க்க கூண்டுக்குள் அடைக்கப்பட்டதுபோன்று காட்சியளிக்கிறது. அத்துடன் தண்டவாளம் இருக்கும் பகுதி பராமரிப்பு இல்லாமல் குப்பைகள் நிறைந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
இது குறித்து பூங்காவுக்கு வந்து செல்லும் பொதுமக்கள் கூறியதாவது:-
வ.உ.சி. உயிரியல் பூங்காதான் திறக்கப்படவில்லை. ஆனால் ஏன் சிறுவர்கள் ரெயிலை மாநகராட்சி திறக்கவில்லை என்பது தெரியவில்லை. இந்த ரெயிலில் செல்ல கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்பட்டது.
அதில் செல்லும்போது சிறுவர்கள், குழந்தைகள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வார்கள். ஆனால் தற்போது அந்த ரெயில் ஓடவில்லை என்பதால், இங்கு வந்து செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அந்த ரெயிலை ஏக்கத்துடன் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை நீடித்து வருகிறது.
புறப்படுமா...
ஏன் இந்த ரெயிலை இயக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரியவில்லை. குழந்தைகளை மகிழ்விக்கதான் இந்த ரெயில் விடப்பட்டது. ஆனால் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கு காரணமாக சிறுவர்கள் ரெயில் இயங்காமல் முடங்கி கிடக்கிறது. எனவே இனியாவது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சிறுவர்கள் ரெயிலை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக சிறுவர்கள் ரெயில் இயக்கவில்லை. ஒரே இடத்தில் ரெயில் நிற்பதால் பழுது ஏற்பட்டு உள்ளது. அதை சரிசெய்து மீண்டும் அந்த ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
எது எப்படியோ....குடும்பத்துடன் வந்து பொழுது போக்க மீண்டும் புறப்படுமா பூங்கா ரெயில்...என்பது கோவை மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு.
Related Tags :
Next Story