ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை
ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இடி, மின்னலுடன் மழை
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் ஏற்பட்ட புழுக்கம் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்தன. மதியம் ஒரு மணிக்கு பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை தொடங்கியது. மதியம் இரண்டு மணி நேரம் வரை மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சில பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பல பகுதிகளில் தூர்வாரப்படாத மழை நீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் மழை நீர் பாயாத நிலை ஏற்பட்டது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
அந்தப் பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு கால்வாய்களில் தேங்கிய கழிவுகளை அகற்றிய பின்னர் மழைநீர் தங்கு தடையின்றி பாய்ந்து சென்றது. எதிர்பாராத திடீர் மழையால் குடைகள் இல்லாமல் வெளியே வந்தவர்கள் நனைந்தபடி சென்றனர். பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பலத்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழை நின்றபிறகு சில்லென்ற காற்று வீசியதால் பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். பென்னலூர்ப்பேட்டை, தாராட்சி, பாலவாக்கம், தண்டலம், பெரியபாளையம், போந்தவாக்கம், கட்சூர், சீத்தஞ்சேரி, சுருட்டப்பள்ளி ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய் தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததன் காரணமாக டன் கணக்கில் மாங்கனிகள் கொட்டி விட்டதால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்தனர்.
அதேபோல், திருவள்ளூர், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், பொன்னேரி, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது பெய்த மழை மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story