உடல் நலம் பாதிக்கப்பட்ட என்ஜினீயருக்கு உதவிகள் வழங்கக்கோரி சாலை மறியல்


உடல் நலம் பாதிக்கப்பட்ட  என்ஜினீயருக்கு உதவிகள் வழங்கக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 6 May 2022 12:15 AM IST (Updated: 5 May 2022 6:40 PM IST)
t-max-icont-min-icon

உடல் நலம் பாதிக்கப்பட்ட என்ஜினீயருக்கு உதவிகள் வழங்கக்கோரி சாலை மறியல் நடந்தது.

திருத்துறைப்பூண்டி:-

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் கபில் (வயது29) இவர் என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் திடீரென இடுப்பு பகுதிக்கு கீழ் எந்தவித உணர்வும் இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இவருக்கு உதவிகள் வழங்கக்கோரி அரசுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியும், தமிழக அரசு சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நிபந்தனையின்றி வங்கி கடன் வழங்க வேண்டும். மாத உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் ரெயில்வே கேட் அருகில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சங்க மாவட்ட தலைவர் சந்திரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் கோபு, மாநில குழு உறுப்பினர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலெக்சாண்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story