சுல்தான்பேட்டை அருகே வீடுகளுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் ஈக்கள்
சுல்தான்பேட்டை அருகே வீடுகளுக்கு கூட்டம், கூட்டமாக ஈக்கள் படையெடுக்கின்றன. இதனால் உணவு சாப்பிட முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே வீடுகளுக்கு கூட்டம், கூட்டமாக ஈக்கள் படையெடுக்கின்றன. இதனால் உணவு சாப்பிட முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
படையெடுக்கும் ஈக்கள்
சுல்தான்பேட்டை ஒன்றியம் செலக்கரிச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் திம்மநாயக்கன்பாளையம். இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பத்தினர்களில் பெரும்பாலோனர் கூலித்தொழிலாளர்களாகவும், விவசாய தொழிலாளர்களாகவும் உள்ளனர். இந்தநிலையில், நிம்மதியை குலைக்கும் முதல் சோதனையாக கடந்த இரு வாரத்திற்கு முன் ஆங்காங்கே செத்துகிடந்த கோழிகளை ருசிக்க வந்த நாய்களில் 4 நாய்கள் சுருண்டு விழுந்து மர்மமான முறையில் இறந்தன. இச்சம்பவம் பொதுமக்களை அச்சப்படுத்தியது.
இறந்த நாய்கள் அப்புறப்படுத்தாமல் அப்படியே போடப்பட்டதால் கடும் துர்நாற்றம் வீசியது. இதனிடையே குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள கோழிப் பண்ணைகளில் இறக்கும் கோழிகளை பணியாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் அப்படியே வீசியுள்ளதால் இறந்த கோழிகள் செத்தநாய்கள் மற்றும் கோழி கழிவுகளில் இருந்து வீசிய துர்நாற்றத்தால் அங்குள்ள பெரும்பாலான வீடுகளுக்கு ஈக்கள் ஆயிரக்கணக்கில் கூட்டம், கூட்டமாக படை எடுத்து மொய்க்க தொடங்கியது.
சாப்பாட்டில் மொய்க்கும் ஈக்கள்
இந்த ஈக்கள் உணவு பொருட்கள், குடிநீர், டீ, வீட்டுவாசல், வீடுகளின் உட்புறம், செடி, கொடிகளில் மொய்த்து தொல்லை கொடுக்க தொடங்கின. இதனால் பகல் நேரத்தில் கூட வீட்டில் நிம்மதியாக சாப்பிட முடியாமல் கிராம மக்கள் தவியாய், தவிக்க துவங்கினர். இரவு நேரம்முழுமையாக தூங்க முடியாவிட்டாலும் சற்று கண்ணயர வேண்டும் என்ற நோக்கத்தில், தினமும் மாலை ஒவ்வொரு வீட்டில் ஏராளமான ஈக்களை பொதுமக்கள் மருந்துகள் மூலமாகவும், சாணி மொழுகியும் கட்டுப்படுத்தினார்கள். ஆனாலும் ஈக்கள் குறைந்தபாடில்லை.
ஈக்கள் தொல்லை அதிகரிப்பால் பெண்கள் மற்றும் முதியவர்கள் தொண்டை நோய், வயிற்றுப்போக்கு, குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. இதனால், சிலர் சொந்த வீட்டைவிட்டு அருகில் உள்ள கிராமங்களில் வாடகைக்கு குடிபுகுந்துள்ளனர்.
உறவினர்கள் வர அச்சம்
சாப்பாட்டு தட்டில் ஈக்கள் கொத்து, கொத்த மொய்க்க தொடங்கியதால் சிலர் சாப்பாட்டை கரைத்து குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இக்கிராமத்தின் ஈக்கள் தொல்லையை கேள்விப்பட்டு இங்கு வசிப்போரில் வீடுகளுக்கு அவர்களின் உறவினர்கள் கூட வந்து செல்ல கடும் அச்சம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஈக்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நவமணி, முத்துராஜ், வட்டார சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் வனிதா உள்பட பலர் அடங்கிய குழுவினர் பிரச்சினைக்குரிய திம்ம நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் எச்சரிக்கை
மேலும், அங்குள்ள கோழிப்பண்ணைகள் மற்றும் அருகில் சித்தநாயக்கன்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் ஆய்வு செய்தனர். பின்னர், கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் வாரம் ஒருமுறை கோழி கழிவுகளை அகற்றி பண்ணையை தூய்மையாக வைக்க வேண்டும். கிருமிநாசினி நன்கு தெளிக்க வேண்டும். மேலும், ஈக்கள்தொல்லை இருக்ககூடாது. பண்ணையை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். அவ்வாறு, செய்யாவிடில் உரிய நோட்டீஸ் வழங்கி பண்ணை நடத்தும் உரிமையை ரத்து செய்வோம் என, எச்சரித்தனர்.
இதனை தொடர்ந்து ஈக்களை கட்டுப்படுத்தகடந்த சில நாட்களாக சுகாதாரத் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் இருப்பினும், ஈக்கள் பிரச்னைஇன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால், பொதுமக்களிடம் அமைதியின்மை தொடர்ந்து நீடித்து வருகிறது.
சாப்பிட முடியவில்லை
இதுகுறித்து திம்மநாயக்கன் பாளையம் பொதுமக்கள் கூறியதாவது:- எங்கள் கிராமத்தில் கடந்த சில வாரங்களாக ஈக்கள் தொல்லை மிக அதிகமாக உள்ளது. லட்சக்கணக்கான ஈக்கள் உணவு பொருட்களையும், வீடுகளை சுற்றி வருவதால் கடும் அவதி அடைந்து வருகிறோம். இதற்கு காரணம் அருகில் உள்ள கோழிப்பண்ணைகள் சுகாதாரமற்ற முறையில் செயல்படுவது தான் முக்கிய காரணமாக உள்ளது. ஈக்களை முழுமையாக ஒழிக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுகாதாரத்திற்கு எதிராக செயல்படும் கோழிப் பண்ணைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈக்கள்தொல்லையால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சரிவர சாப்பிட முடியவில்லை, தூங்க முடிவதில்லை. இந்த நிலை தொடர்ந்தால்உடல்நலம் முழுமையாக பாதிப்பு ஆகிவிடுமோ என்ற கவலை உள்ளது. இப்பிரச்சினைகாரணமாக சிலர் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமத்திற்கு வசிக்க சென்றுவிட்டனர். எங்களின் இந்த அவலநிலை முழுமையாக மாறவில்லை என்றால் இன்னும் சிலர் கிராமத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். எனவே, அதிகாரிகள் எங்கள் நிலையை கருத்தில் கொண்டு ஈக்களை முழுமையாக அழித்து ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், இனி இதுபோல் ஈக்கள் தொல்லை இல்லாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story