நெகமத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது


நெகமத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது
x
தினத்தந்தி 5 May 2022 8:49 PM IST (Updated: 5 May 2022 8:49 PM IST)
t-max-icont-min-icon

நெகமத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நெகமம்

நெகமத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

நீராதாரங்கள்

மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர் வரத்தை சேமித்து நிலத்தடி நீர் இருப்பை உயர்த்துவதில் நீராதாரங்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கிராமப்புற பகுதிகளில் தாழ்வான இடங்களில் உருவாக்கப்பட்ட குளம், குட்டைகள் மழைக்காலங்களில் நீர்வரத்தை பெற்று வருகின்றன. சமவெளிப்பகுதிகளில் பரவலாக செல்கின்ற தண்ணீரை ஒன்றிணைத்து நீராதாரங்களில் சேமிப்பதற்கு நீர் வழித்தடங்கள் உதவி புரிகின்றன. தண்ணீரின் மகத்துவத்தை உணர்ந்த நமது முன்னோர்கள் நீர்வழித்தடங்கள் மற்றும் குளம், குட்டைகளை பராமரிப்பதில் தீவிரம் காட்டி வந்தனர். 
பருவ மழைக்கு முன்பு அவற்றில் தேங்கியுள்ள வண்டல் மண், சவுடுமண் மற்றும் செம்மண்ணை எடுத்துச்சென்று விவசாய நிலங்களில் போட்டு வந்தனர். இதனால் நிலம் வளம் அடைந்ததுடன் நீர் ஆதாரங்களும் ஆழமானது. 

குளம், குட்டைகள்

இந்த நிலையில் காலப்போக்கில் நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் வழித்தடங்களில் போதிய பராமரிப்பு மேற்கோள்ளப்படவில்லை. இதனால் அவை படிப்படியாக நீர்த்தேக்க பரப்பளவை இழந்து வந்தன. இதனால் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தை சேமிக்க முடியாமல் போனது இதன் காரணமாக அவை விரைவில் வறட்சியின் பிடியில் சிக்கி கொண்டன. மேலும் நீராதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்வரத்து குறைந்து விட்டது. இந்த சூழலில் அணைகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீராதாரங்களில் தேங்கியுள்ள வண்டல்மண், சவுடுமண், செம்மணை விவசாயிகள் எடுத்துக் கொள்வதற்கு கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு அனுமதி அளித்து வருகிறது. 

நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

அதைத்தொடர்ந்து விவசாயிகள் வண்டல் மண்ணை அள்ளும் பணியில் குறிப்பிட்ட இடைவெளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் குளங்கள், குட்டைகள் நீர்வரத்து இடங்கள் உள்ளிட்டவை ஓரளவுக்கு ஆழமாகி உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நெகமம் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்வழித்தடங்கள் மூலமாக குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டு வருகிறது. 60 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நீராதாரங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கி வருகிறது. மேலும் ஒருசில இடங்களில் தண்ணீர் வழிந்தோடும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வரும் சூழல் உருவாகி உள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story