வணிகர் தினத்தையொட்டி கடைகள் அடைப்பு
வணிகர் தினத்தையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
விழுப்புரம்,
ஆண்டுதோறும் மே மாதம் 5-ந் தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று வணிகர் தினத்தையொட்டி விழுப்புரம் நகரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த வியாபாரிகள் தங்களது மளிகை கடைகள், துணிக்கடைகள், காய்கறி கடைகள், ஓட்டல்கள், நகை கடைகள் என பல்வேறு கடைகளை அடைத்திருந்தனர். மருந்து கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருந்தன.
அதுபோல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒன்றிரண்டு டீக்கடைகளும் திறந்திருந்தன.இருப்பினும் பெரும்பாலான வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்திருந்ததால் விழுப்புரம் நகரில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் விழுப்புரம்- புதுச்சேரி சாலை, திரு.வி.க. சாலை, காமராஜர் வீதி, கே.கே.சாலை, எம்.ஜி.சாலை, சென்னை- திருச்சி நெடுஞ்சாலை ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன.
இதேபோல் திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், வானூர், மரக்காணம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்திருந்தனர். பின்னர் வியாபாரிகள் அனைவரும் திருச்சியில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி
வணிகர் தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கடைத்தெரு, பள்ளிவாசல்தெரு, வடக்கு தெரு, கிழக்கு தெரு, யூனியன் ஆபீஸ் ரோடு, ஹாஸ்டல் ரோடு ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக கடைவீதிகள் பொது மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் சங்கராபுரம், கள்ளக்குறிச்சி உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வணிகர்கள் கடையை அடைத்திருந்தனர்.
Related Tags :
Next Story