‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தூர்வாரப்படுமா?
அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையத்தில் பல மாதங்களாக சாக்கடை தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதனால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறை அதிகாரிகள் சங்கராபாளையத்தில் சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?
குப்புசாமி, சங்கராபாளையம்.
தடுமாற வைக்கும் ரோடு
கோபியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோடு இரு வழிப்பாதையாக உள்ளது. அதில் சத்தியிலிருந்து கோபி செல்லும் ரோடு பழுதடைந்துள்ளது. பல இடங்களில் குண்டும், குழியுமாக காட்சி தருகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பழுதடைந்த ரோட்டை நேரில் சென்று பார்வையிட்டு செப்பனிட ஆவன செய்யவேண்டும்
நாதன், கோபி.
குவிந்துள்ள குப்பை
ஈரோடு சம்பத் நகர் பழமுதிர்ச்சோலை எதிரே காலியாக உள்ள இடத்தில் ஏராளமான குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சம்பத் நகரில் குவிந்துள்ள குப்பையை அகற்றுவார்களா?
ஹரிச்சந்திரன், சம்பத் நகர்.
ஆபத்தான சாக்கடை மூடி
ஈரோடு மாநகராட்சி ரெயில் நகரில் இருந்து அண்ணா நகர் செல்லும் வழியில் பாதாள சாக்கடை திட்ட தொட்டியின் மூடி ஒன்று திறந்த நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இங்கு அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் சென்று கொண்டிருந்தது. அதை சரி செய்ய தொட்டியின் மூடி திறக்கப்பட்டது. பின்னர் 2 கம்பிகளை போட்டு தொட்டியின் மேலாக மூடியை வைத்துவிட்டு சென்று விட்டனர். குறுகலான இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே விரைவாக தொட்டியை சரி செய்ய வேண்டும்.
பொதுமக்கள், ரெயில் நகர். ஈரோடு.
இடியும் நிலையில் சத்துணவு கூடம்
ஊஞ்சலூர் அருகே உள்ள கிளாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட கோம்புப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள சத்துணவு சமையல் கூடத்தின் கான்கிரீட்டுகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாணவ, மாணவிகள் அடிக்கடி இந்த கூடத்துக்கு வந்து செல்கிறார்கள். எனவே அவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே சத்துணவு கூடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யவேண்டும்.
பொதுமக்கள், கோம்புபாளையம்.
Related Tags :
Next Story