பெருந்துறையில் விபத்து: லாரி மீது சொகுசு பஸ் மோதி மூதாட்டி சாவு- 14 பேர் படுகாயம்


பெருந்துறையில் விபத்து: லாரி மீது சொகுசு பஸ் மோதி மூதாட்டி சாவு- 14 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 May 2022 3:58 AM IST (Updated: 7 May 2022 3:58 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே அதிகாலையில் லாரி மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் மூதாட்டி இறந்தார். 14 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

பெருந்துறை
பெருந்துறை அருகே அதிகாலையில் லாரி மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் மூதாட்டி இறந்தார். 14 பேர் படுகாயம் அடைந்தார்கள். 
சொகுசு பஸ்
பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சிக்கு சொகுசு பஸ் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. பெருமாள் என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக செல்வராஜ் என்பவர் உடன் வந்தார். பஸ்சில் 25 பேர் பயணம் செய்தார்கள். நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பூவம்பாளையம் பிரிவு அருகே பஸ் சென்று கொண்டு இருந்தது. 
பஸ்சுக்கு முன்னால் இரும்பு பட்டா கம்பிகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி மெதுவாக சென்றுகொண்டு இருந்தது. அந்த லாரியை பஸ்சின் டிரைவர் முந்திச்செல்ல முயன்றார். அப்போது பஸ்சின் முன்பகுதி லாரியின் பின்பகுதி மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி மோசமாக நொறுங்கியது. 
மூதாட்டி சாவு
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம், பழைய கன்னிவாடியை அடுத்துள்ள கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரின் மனைவி சரஸ்வதி (வயது 74) என்பவர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். இதில் அவர் சம்பவ  இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ்டிரைவர்கள் பெருமாள், செல்வராஜ், லாரி டிரைவர் சேலம் சீலநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (35),
 பயணிகள் பெங்களூருவை சேர்ந்த பிரபாகரன் (43), பிரகாஷ் (54), உடுமலையை சேர்ந்த கிருஷ்ணவேணி (52), ராமமூர்த்தி (47), திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணன் (59), கதிரேசன் (80), ரகுபதி (52), பாலு (47), பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் (47), 
பவித்ரா (26), இவருடைய மகன் சித்தார்த் ஆகிய 14 பேர் படுகாயமடைந்தார்கள்.
விசாரணை
விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 14 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்கள். மேலும் விபத்தில் பலியான சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story