சுரைக்காய் கொள்முதல் விலை வீழ்ச்சி


சுரைக்காய் கொள்முதல் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 8 May 2022 10:30 PM IST (Updated: 8 May 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

நெகமம் பகுதியில் சுரைக்காய் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடையை தள்ளிப்போட்டு இருக்கின்றனர்.

நெகமம்

நெகமம் பகுதியில் சுரைக்காய் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடையை தள்ளிப்போட்டு இருக்கின்றனர்.

சுரைக்காய் கொள்முதல்

நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பந்தல் அமைத்து விவசாயிகள் சுரைக்காய் சாகுபடி செய்து உள்ளனர். இது குறுகியகால பயிர் என்பதால், பயிரிட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். நடவு செய்த 30 நாட்களில் காய்ப்புத்திறனுக்கு வருகிறது. அதற்குபிறகு அறுவடைக்கு தயாராகி விடுவதால் வியாபாரிகளும், விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று, ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்கின்றனர். 

இந்த நிலையில் சுரைக்காய் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் தோட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தும், சுரைக்காய்களை விவசாயிகள் பறிக்காமல் விட்டு உள்ளனர். மேலும் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது.

சாகுபடி பரப்பு அதிகரிப்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கொடி வகை பயிரான சுரைக்காய் வேகமாக வளரக்கூடியது. மேலும் அதிக மகசூல் தரக்கூடியது ஆகும். அதை ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்யலாம். 90 நாட்கள் வரை பலன் தரக்கூடியது. 

ஒருநாள் விட்டு ஒருநாள் பறித்தால் ஒரு சுரைக்காய் அரை கிலோ வரையிலும், 2 அல்லது 3 நாட்கள் விட்டு பறித்தால் ஒரு சுரைக்காய் ஒரு கிலோ வரையிலும் விளைச்சல் தரும். வழக்கமாக மார்ச் மற்றும் மே ஆகிய மாதங்கள் சுரைக்காய் சாகுபடிக்கு ஏற்ற காலமாக உள்ளது. இதனால் பந்தல் அமைத்து, சுரைக்காய் சாகுபடி பரப்பை அதிகரித்து உள்ளோம். 

கிலோ ரூ.5-க்கு விற்பனை

தற்போது நெகமம் பகுதியில் சுரைக்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது. ஆனால் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஒரு கிலோ சுரைக்காய் ரூ.5-க்கு விற்பனை ஆகிறது. 

இது பறிப்பு கூலி, களை எடுத்தல் கூலி, தண்ணீர் பாய்ச்சல் செலவு, உர செலவு ஆகியவற்றுக்கு கூட கட்டுப்படி ஆகாது. இதன் காரணமாக சுரைக்காய்களை பறிக்காமல் அறுவடையை தள்ளிப்போட்டு உள்ளோம். இது வேதனையை தருவதோடு நஷ்டம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story