விழுப்புரத்தில் உடைந்த சிறுபாலத்தால் மாணவர்கள் அச்சம் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா


விழுப்புரத்தில் உடைந்த சிறுபாலத்தால் மாணவர்கள் அச்சம் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா
x
தினத்தந்தி 8 May 2022 10:49 PM IST (Updated: 8 May 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் உடைந்த சிறுபாலத்தால் பள்ளி மாணவ- மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த பாலத்தை சீரமைக்க கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது

விழுப்புரம்

உடைந்த சிறுபாலம்

விழுப்புரம் பூந்தோட்டம் பாதைக்கும், விழுப்புரம்- புதுச்சேரி சாலைக்கும் இடையே வாய்க்கால் சிறுபாலம் ஒன்று உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த பாலத்தின் அருகில் பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளதால் அப்பள்ளியில் படிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இவ்வழியாக பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இவ்வாறு போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை உள்ளது. இப்படியிருக்க இங்குள்ள சிறுபாலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென உடைப்பு ஏற்பட்டு சாலை உள்வாங்கி அதன் கான்கிரீட் இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. தரமற்ற முறையில் இந்த சிறுபாலத்தை கட்டியதால் இவ்வாறு உடைப்பு ஏற்பட்டு உள்வாங்கியதாக அப்பகுதி பொதுமக்கள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

மாணவர்கள் அச்சம்

இந்த சிறுபாலத்தில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாகியும் இதுநாள் வரையிலும் அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நெடுஞ்சாலைத்  துறையினர், இந்த சிறுபாலத்தை சீரமைப்பது தங்கள் துறையின் கீழ் வராது என்றும், நகராட்சியின் பொறுப்பு என்றும் கூறி ஒதுங்கிக்கொள்கின்றனர். நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் இதனை சீரமைக்க வேண்டிய பொறுப்பு தங்கள் வசம் இல்லை, மாநில நெடுஞ்சாலைத்துறை தான் சீரமைக்க வேண்டும் என்று மாறி, மாறி கூறி வருகின்றனரே தவிர உடைந்த சிறுபாலத்தை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் பாதிக்கப்படுவது பொதுமக்களும், பள்ளி மாணவ- மாணவிகளும்தான். உடைந்த சிறுபாலத் தால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இவ்வழியாக செல்லும் பள்ளி சிறுவர்கள், யாரேனும் எதிர்பாராதவிதமாக தவறி இந்த சிறுபாலத்திற்குள் விழுந்தால் அவர்களின் கதி அதோ கதிதான்.

கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

எனவே பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட கலெக்டர் இதில் உடனடியாக தலையிட்டு உடைந்த சிறுபாலத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பாரா?

Next Story