ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தவர்களிடம் ரூ.5.48 கோடி மோசடி செய்த 3 பேர் கைது
திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தவர்களிடம் ரூ.5.48 கோடி மோசடி செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 17 பேரை தேடி வருகிறார்கள்.
திருச்சி,
ரியல் எஸ்டேட் தொழில்
திருச்சி கே.கே.நகர் மங்கம்மா சாலையை சேர்ந்தவர் செல்வராணி (வயது 47). இவருக்கு, திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்பாரோவ் குளோபல் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் அறிமுகம் ஆனார்கள். அப்போது, ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.
இதை நம்பி, செல்வராணி ரூ.3½ லட்சத்தை கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதலீடு செய்தார். மேலும் இதுபற்றி தனது உறவினர்கள், நண்பர்களிடமும் தெரிவித்தார். அத்துடன் அவர்களிடம் பல கட்டங்களாக ரூ.5 கோடியே 48 லட்சத்து 3 ஆயிரத்தை செல்வராணி வசூல் செய்து கொடுத்துள்ளார். இதில் ஒரு சிலருக்கு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சார்பில், காசோலை மற்றும் ரசீதுகள் வழங்கப்பட்டது.
ரூ.5.48 கோடி மோசடி
இதற்கிடையே பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும், யாருக்கும் வட்டியோ, அசலோ கொடுக்கவில்லை. அத்துடன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது, ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் பணத்தை கொடுக்க மறுத்ததுடன், தகாதவார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் செல்வராணி புகார் கொடுத்தனர்.
அதன்பேரில், ரூ.5.48 கோடி மோசடி செய்ததாக திருச்சியை சேர்ந்த பாபு (51), சாகுல்அமீது (63), பசீர்அகமது (38) உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருச்சியை சேர்ந்த பாபு, சாகுல்அமீது, பசீர்அகமது ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 17 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story