கன்டெய்னர் பெட்டிக்கு அடியில் சிக்கி அண்ணன்-தங்கை உடல் நசுங்கி சாவு
தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி மற்றொரு லாரியில் மோதிய விபத்தில் கன்டெய்னர் பெட்டிக்கு அடியில் சிக்கி அண்ணன்-தங்கை பலியானார்கள்.
அண்ணன்-தங்கை
சென்னை வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51). இவர், அண்ணாநகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய தங்கை நிவேதா (45). காஞ்சீபுரத்தில் வசித்து வருகிறார்.
நேற்று சீனிவாசன் தனது தங்கை நிவேதா உடன் ஆண்டார்குப்பம் சோதனைச்சாவடி அருகே உள்ள கனகதுர்கா கோவிலுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வண்ணாரப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
உடல் நசுங்கி சாவு
மணலி எம்.எப்.எல். ரவுண்டானா அருகே வந்தபோது, எதிரே சத்தியமூர்த்தி நகரில் இருந்து ஆண்டார்குப்பம் நோக்கி தறிகெட்டு ஓடிவந்த கன்டெய்னர் லாரி, எதிரே வந்த மாநகர பஸ் மீது மோதாமல் இருக்க டிரைவர் திருப்பிய போது வளைவில் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது மோதியது.
மோதிய வேகத்தில் கன்டெய்னர் லாரியில் இருந்த கன்டெய்னர் பெட்டி நடு ரோட்டில் கவிழ்ந்தது. அங்கு மோட்டார்சைக்கிளில் சென்ற சீனிவாசன், நிவேதா ஆகியோர் மீது கன்டெய்னர் பெட்டி விழுந்ததில், அண்ணன்-தங்கை இருவரும் கன்டெய்னர் பெட்டிக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், கிரேன் மூலம் கன்ெடய்னர் பெட்டியை தூக்கி, பலியான 2 பேரின் உடல்களை மீட்க போலீசாருக்கு உதவினார். சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story