வேலைவாய்ப்பு முகாம் மூலம் 15 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்


வேலைவாய்ப்பு முகாம் மூலம் 15 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது என மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.

சிறப்பு மலர்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்தது. இதனையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் `ஓயா உழைப்பின் ஓராண்டு' என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்த சிறப்பு மலரை வெளியிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து பல்வேறு திட்ட வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு

அதிலும் குறிப்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்திற்கு நேரடியாக வருகை தந்து அங்கு இருக்கும் இருளர் மற்றும் நரிகுறவர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

மேலும் வண்டலூரில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்தார். அந்த முகாமிலேயே 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான ஆணை வழங்கப்பட்டது.

இதேபோல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48 மற்றும் இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்கள் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்து உள்ளனர்.

முனைப்புடன் செயல்படும் அரசு

அனைத்து துறைகளிலும் மூலமாக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மக்களுக்கு சென்றடையவும் மக்களின் வளர்ச்சிக்கான தேவைகளை அறிந்து அதனை உடனடியாக செயல்படுத்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கலெக்டருடன் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ், மறைமலைநகர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ஜெ.சண்முகம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி நகர் மன்ற தலைவர் எம்.கே‌‌.டி.கார்த்திக், மறைமலைநகர் நகராட்சி நகர்மன்ற துணை தலைவர் சித்ரா கமலகண்ணன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மரு.இளங்கோவன், மறைமலைநகர் நகராட்சி ஆணையர் லட்சுமி, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் இளம்பரிதி ஆகியோர் உடனிருத்தனர்.



Next Story