‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 9 May 2022 7:46 PM IST (Updated: 9 May 2022 7:46 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:

சொகுசு பஸ்கள் வேண்டாம்

கோவை சோமனூர் பகுதிக்கு இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள் சொகுசு பஸ்களாகவே உள்ளன. அதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பயணம் செய்ய முடிவது  இல்லை. மேலும் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் பஸ்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்படுகின்றன. இதனால் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே சொகுசு பஸ்களை தவிர்த்து குறைந்த கட்டண பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும்.

ராஜேந்திரன், சோமனூர்.

தடுப்பணையில் குளிப்பது தடுக்கப்படுமா?

பொள்ளாச்சி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற ஆழியாறு அணை உள்ளது. இதன் தடுப்பணையில் ஆழம் அதிகம். மேலும் சேறும், சகதியும் காணப்படுகிறது. இதை அறியாமல் சிலர் குளிக்கும்போது, அதில் சிக்கி உயிரிழப்பது அவ்வப்போது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பணையை சுற்றி கம்பி வேலி அமைத்து பொதுமக்கள் குளிக்க செல்வதை தடுக்க வேண்டும்.

தியாகராஜ், சுல்தான்பேட்டை.

மாணவ-மாணவிகள் அவதி

கோத்தகிரியில் இருந்து மசக்கல் மற்றும் தீனட்டி கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை குறித்த நேரத்தில் இயக்கப்படாததால் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அரசு பஸ்களை குறித்த நேரத்தில் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்லதுரை, கூக்கல்தொரை.

அபாயகரமான மின்கம்பம்

கோவையில் விளாங்குறிச்சி சாலையில் இந்து நகர் குடியிருப்பு பகுதியில் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து மின் வாரியத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சூறாவளி காற்று வீசும்போது அந்த மின்கம்பம் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சாய்ந்த நிலையில் காணப்படும் அந்த அபாயகர மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, விளாங்குறிச்சி.

பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

கோவை பிரிமியர் நகரில் இருந்து ஈச்சனாரி வழியாக கோவில்மேடு பகுதிக்கு 12-பி, ஈச்சனாரியில் சுந்தராபுரம் வழியாக துடியலூருக்கு ஏ-4 ஆகிய அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் அந்த பஸ்களை பயன்படுத்தி வநத் மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாச்சிமுத்து, குறிச்சி.

குண்டும், குழியுமான சாலை

கோவை திருச்சி சாலையில் உப்பிலிபாளையம் பகுதியில் படகு இல்லம் அருகே உள்ள சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலத்தில் அங்கு சேறும், சகதியும் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

ராஜேஷ், கோவை.

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி
சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டது
கோவை மாநகராட்சி 19-வது வார்டு கற்பக விநாயகர் நகரில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் மண் அடைத்து கிடந்தது. இதனால் அந்த கால்வாயை தூர்வார வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தோம். அதுதொடர்பாக ‘தினத்தந்தி’ நாளிதழிலும் புகார் பெட்டி பிரிவில் செய்தி வெளியானது. தற்போது அந்த சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டு உள்ளது. இதற்கு காரணமான ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் நன்றி.

மாரிமுத்து, கோவை.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கோவை-மேட்டுப்பாளையம் இடையே காமராஜ் சாலைக்கு அருகில் ஜீவா நகர் உள்ளது. இங்கு குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் ெதாற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. அங்கு வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டியும் சேதம் அடைந்து உள்ளது. எனவே புதிய குப்பை தொட்டி வைக்கவும், தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

பாலாமணி, கோவை.

பழுதான பேட்டரி வாகனங்கள்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளை அழைத்து செல்ல பேட்டரி வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அந்த வாகனங்கள் பழுதாகி கேட்பாரற்று கிடக்கிறது. பல லட்சம் ரூபாய் செலவழித்து செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் முடங்கி கிடப்பது பொதுமக்களை அதிருப்தியடைய செய்துள்ளது. மேலும் நோயாளிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த வாகனங்களை பழுது நீக்கி மீண்டும் பயன்படுத்த அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சதீஷ், கலங்கல், கோவை.

Next Story