புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டிபொம்மை விற்பனை அரங்கம் திறப்பு


புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டிபொம்மை விற்பனை அரங்கம் திறப்பு
x
தினத்தந்தி 10 May 2022 1:28 AM IST (Updated: 10 May 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை ரெயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மை விற்பனை அரங்கம் திறக்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர்:
தஞ்சை ரெயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மை விற்பனை அரங்கம் திறக்கப்பட்டு உள்ளது.
ரெயில் நிலையம்
மத்திய அரசு அறிவித்த ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தில் உள்ளூர் கைவினைப் பொருட்கள், கலை பொருட்கள் விற்பனையை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் அதற்கான விற்பனை அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு ரெயில் நிலையங்களில் அந்தந்த உள்ளூர் பொருட்கள் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி திருச்சி ரெயில்வே கோட்டத்தின் கீழ் இந்த திட்டத்தில் தஞ்சை ரெயில்வே நிலையம் தேர்வு செயப்பட்டு தஞ்சையின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் புவிசார் குறியீடு பெற்ற நெட்டி அரங்கு அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.
தலையாட்டி பொம்மை
அதனைத்தொடர்ந்து தற்போது தஞ்சை ரெயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மைகளின் விற்பனை கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குணசேகரன் தலைமை தாங்கினார். பொன்.காசிநாதன் வரவேற்றார். உலகத் தமிழர் பேரவை துரை குபேந்திரன் முன்னிலை வகித்தார்.
விழாவில் திருச்சி கோட்ட உதவி வணிக மேலாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் தஞ்சை ரெயில் நிலைய மேலாளர் சம்பத்குமார், முதன்மை வணிக ஆய்வாளர் தங்கமோகன் உள்பட பலர்கலந்து கொண்டனர். முடிவில் ஆர்டிஸ்ட் மணிவண்ணன் நன்றி கூறினார்.
ரூ.10 ஆயிரம் வரை.....
ரெயில் நிலையத்தில் தலையாட்டி பொம்மை விற்பனை அரங்கம் வைத்துள்ள மாரியம்மன் கோவிலை சேர்ந்த பூபதி கூறுகையில், “மத்திய அரசின் இந்த திட்டம் மூலம் எங்களின் வாழ்வாதாரம் உயர வாய்ப்பு உள்ளது. மேலும் புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மை புகழ் வெளியூர், வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கும் தெரியவரும். இந்த அரங்கில் ரூ.100 முதல் ரூ.10 ஆயிரம் வரையிலான தலையாட்டி பொம்மைகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் ராஜா, ராணி தலையாட்டி பொம்மை உள்ளிட்ட பல்வேறு வகையான பொம்மைகள் உள்ளன” என்றார்.

Next Story