சாலை தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி செல்போன் கொள்ளையர்கள் 2 பேர் பலி


சாலை தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி செல்போன் கொள்ளையர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 May 2022 5:41 PM IST (Updated: 10 May 2022 5:41 PM IST)
t-max-icont-min-icon

வாலிபரிடம் செல்போன் பறித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற போது சாலை தடுப்பு சுவரில் மோதி கொள்ளையர்கள் 2 பேர் பலியானார்கள்.

செல்போன் பறிப்பு

சென்னை பாரிமுனை ராஜாஜி சாலை இந்தியன் வங்கி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரிடம் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், செல்போனை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

தீவுத்திடல் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி வாலாஜா சாலை சிக்னல் கொடிமர சாலையிலுள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் செல்போன் கொள்ளையர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

கொள்ளையர்கள் சாவு

இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இருவரையும் போக்குவரத்து போலீஸ்காரர் ராஜ்குமார் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்போன் கொள்ளையர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

பலியான கொள்ளையர்கள் இருவரும் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. அவர்கள் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிளில் பதிவு எண் இல்லாததால் அதை வைத்தும் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை. இதுகுறித்து யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story