மனைவிக்கு ‘வாட்ஸ்அப்’பில் வீடியோ அனுப்பி விட்டு ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை


மனைவிக்கு ‘வாட்ஸ்அப்’பில் வீடியோ அனுப்பி விட்டு ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 May 2022 12:56 PM GMT (Updated: 2022-05-10T18:26:50+05:30)

மனைவிக்கு ‘வாட்ஸ்அப்’பில் வீடியோ அனுப்பி விட்டு ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணம் செய்த 5 மாதங்களில் இந்த சோகம் நேர்ந்துவிட்டது.

ஊர்க்காவல் படைவீரர்

சென்னை காசிமேடு பழைய அமராஞ்சிபுரம் பகுதியில் வசித்து வந்தவர் மதன் (வயது 27). தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்த்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஹேமலதா (25) என்ற பெண்ணை காதலித்து, 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்த மதன், ஆணழகன் பட்டம் வென்றுள்ளார். திருமணத்துக்கு பிறகு அதே பகுதியில் கணவன்-மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 5 மாதங்களில் கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த மதன், கடந்த 2-ந்தேதி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்கொலைக்கு முன்னதாக மதன், தனது மனைவிக்கு ‘வாட்ஸ்அப்’பில் ஒரு வீடியோ அனுப்பினார். அதில், “உனக்கு விவாகரத்து தானே வேண்டும் என்று கேட்டாய். இன்னும் 12 மணி நேரத்தில் நீயே தாலியை கழற்றி விடுவாய். நீ சந்தோஷமாக இரு” என்று கூறியபடி தூக்கில் தொங்குவதுபோல் அந்த வீடியோ காட்சியில் பதிவாகி இருந்தது.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதுபற்றி காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, மேலும் அவரது செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் மதனின் உடலை கேட்டு மனைவி ஹேமலதாவின் உறவினர்கள் மற்றும் மதனின் உறவினர்கள் என இரு தரப்பினரும் போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மதன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவர்களது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்கு பிறகு சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் மதனின் உடல் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்படும். அவர் வீட்டில் 1 மணி நேரம் வைத்திருந்து சடங்குகள் செய்து விட்டு பின்னர் மதனின் பெற்றோரிடம் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று கூறினர். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story