கோவைக்கு விமானத்தில் 2¾ கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்


கோவைக்கு விமானத்தில் 2¾ கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்
x
தினத்தந்தி 10 May 2022 7:05 PM IST (Updated: 10 May 2022 7:05 PM IST)
t-max-icont-min-icon

கோவைக்கு விமானத்தில் 2¾ கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்


கோவை

கோவைக்கு விமானத்தில் ரூ.2¾ கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

உகாண்டா நாட்டு பெண்

கோவை விமான நிலையத்துக்கு கடந்த 6-ந் தேதி ஷார்ஜா விமானத்தில் பெண் பயணி ஒருவர் போதைப்பொருளை கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் கோவை- ஷார்ஜா விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்து சோதனை மேற்கொண்டனர். 

அப்போது உகாண்டா நாட்டை சேர்ந்த சாண்ட்ரா நான்டெசா (வயது 33) என்ற பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

எனவே அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். உடனே அந்த பெண், திருப்பூரில் பின்னலாடை தொழிலுக்காக வந்திருப்பதாக கூறினார்.

அரசு மருத்துவமனையில் சோதனை

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த பெண் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகத்தின் பேரில் அவரை சோதனை செய்தனர்.

 ஆனால் எந்த பொருளும் சிக்க வில்லை. ஆனால் வயிற்றுக்குள் எதையோ விழுங்கி கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. 

எனவே அந்த பெண்ணை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில், அவரது வயிற்றுக் குள் கட்டி போன்ற ஏதோ ஒரு பொருள் இருப்பதும், அது போதைப் பொருளை மாத்திரை போல் செய்து அவற்றை விழுங்கி கடத்தி வந்ததும் தெரிய வந்தது. 

ரூ.2¾ கோடி போதை மாத்திரை

இதையடுத்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் அந்த பெண்ணுக்கு இனிமா கொடுத்து வயிற்றுக்குள் இருந்த பொருள் வெளியே எடுக்கப்பட்டது. 

இதில் அவரது வயிற்றில் இருந்து 2 நாட்களில் 81 மாத்திரைகள் வெளியே வந்தன.

அவற்றை அதிகாரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதன்  முடிவில், அந்த பெண் மாத்திரைகளாக விழுங்கி  வயிற்றுக்குள் மறைத்து கடத்தி வந்தது "மெத்ராபெத்தமின் " என்ற போதைப் பொருள் என்பது தெரியவந்தது.

882  கிராம் எடையுள்ள இந்த போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.2¾ கோடியாகும்.

கைது

இதைத்தொடர்ந்து உகாண்டா நாட்டு பெண் சாண்ட்ரா நான்டெசாவை மத்திய சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். 


பின்னர் அவர் கோவை போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

அவரை வருகிற 23-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


Next Story