கோவையில் லேசான மழை பெய்தது. சூறாவளி காற்று காரணமாக மரம் விழுந்ததில் 4 வீடுகள் சேதமானது. 3 பேர் படுகாயம் அடைந்தனர்
கோவையில் லேசான மழை பெய்தது. சூறாவளி காற்று காரணமாக மரம் விழுந்ததில் 4 வீடுகள் சேதமானது. 3 பேர் படுகாயம் அடைந்தனர்
துடியலூர்
கோவையில் லேசான மழை பெய்தது. சூறாவளி காற்று காரணமாக மரம் விழுந்ததில் 4 வீடுகள் சேதமானது. 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பரவலாக மழை
கோவையில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் நிலவியது. வழக்கமாக மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை மழை பெய்யும்.
ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு கோடைமழை பெய்யவில்லை. இந்த நிலையில் கோவையில் கடந்த ஓரிரு நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே நேற்று கோவையில் காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. காலை நேரத்தில் பல இடங்களில் மழை பெய்தது.
இதன் காரணமாக பள்ளிகளுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் குடைகளை பிடித்தபடி சென்றனர்.
மரம் விழுந்தது
இந்த நிலையில் கோவையில் பல பகுதிகளில் அதிகாலை பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது லேசான மழையும் பெய்தது.
துடியலூர் அருகே உள்ள பன்னிமடை செல்வவிநாயகர் நகர் பகுதியில் வீட்டின் அருகே நின்ற புளியமரம் சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கீழே சாய்ந்தது.
அந்த மரம் அங்கு இருந்த 3 வீடுகள் மீது விழுந்தது.
இதனால் 4 வீடுகளும் சேதம் அடைந்ததுடன் வீட்டில் இருந்த மகேந்திரன் (வயது 39), விமலா (45), ரங்கம்மாள் என்கிற ரங்கி (75) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின்கம்பங்கள் சேதம்
அதுபோன்று அங்கு இருந்த 2 மின்கம்பங்களும் சேதமடைந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கோவை வடக்கு ஆர்.டி.ஓ. ரவிச்சந்தரன், தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் கணேசபிரபு, கிராம நிர்வாக அலுவலர் பிரேம் கிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை, மின்வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அங்கு மரத்தை வெட்டி அகற்றும் பணியும், மின்கம்பத்தை மாற்றும் பணியும் நடந்தது. அத்துடன் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நிவாரணம் வாங்கிக்கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த மழை கோவை மாநகர் பகுதி மட்டுமல்லாமல் புறநகர் பகுதியிலும் பெய்தது. மாலை வரை வெயிலின் தாக்கம் இல்லாமல் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் இதமான காலநிலை நிலவியது.
மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story