லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து டிரைவர் படுகாயம்


லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து டிரைவர் படுகாயம்
x
தினத்தந்தி 10 May 2022 9:53 PM IST (Updated: 10 May 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

கோவை-பொள்ளாச்சி சாலையில் கோழி தீவன மூலப்பொருட்கள் ஏற்றி வந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிணத்துக்கடவு


லாரி கவிழ்ந்தது

மராட்டியம் மாநிலம் கோலாப்பூரில் இருந்து கோழி தீவனம் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை ஏற்றி கொண்டு ஒரு லாரி பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையம் பகுதியில் உள்ள கோழி தீவன உற்பத்தி தொழிற்சாலைக்கு புறப்பட்டது. லாரியை மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 31) ஓட்டினார். 

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் பிரிவு பகுதியில்  லாரி வந்து கொண்டிருந்தது. 
அப்போது திடீரென லாரி டிைரவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் டிரைவர் ஜெயக்குமார் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி விபத்துக்குள்ளான போது சாலையில் பிற வாகனங்கள் வராததாலும், யாரும் நடைபயிற்சி செல்லாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  

போக்குவரத்து பாதிப்பு
 
சாலையின் நடுவே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கோவை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோவையில் இருந்து பொள்ளாச்சி வந்த வாகனங்கள், அரசு பஸ்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. 

மேலும் தலைகுப்புற கவிழ்ந்த லாரியின் டீசல் டேங்க் உடைந்து டீசல் சாலையில் கொட்டியது.  இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அதிகாரி காளிமுத்து தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து டீசல் டேங்க் மற்றும் டீசல் மீது முன்னெச்சரிக்கையாக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். 

தொடர்ந்து 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த லாரியை மீட்கும் பணி நடந்தது. முதலில் லாரியை மீட்ட பின்னர், கோழி தீவன மூலப்பொருட்கள் மூட்டைகள் வேறு சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது.  விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story