உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய கோரி நூதன போராட்டம்
பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. குழாயை சரிசெய்ய கோரி செடிகளை நட்டு ஆட்டோ டிரைவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
வீணாகும் குடிநீர்
பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பழனி, மதுரை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாகும். மேலும் கோவை, கேரளா செல்லும் வாகன ஓட்டிகளும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் உடுமலை சாலை மரப்பேட்டை பகுதியில் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கசிவை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் தற்போது உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. தண்ணீர் தேங்கி சாலை சேதமடைந்ததால் விபத்து ஏற்படுகிறது. இந்தநிலையில் உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சேதமடைந்த சாலையில் செடிகளை பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் நட்டு வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சரிசெய்ய வேண்டும்
குழாயில் லேசான கசிவு இருக்கும் போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்போது கசிவு பெரிதாகி அதிகளவு குடிநீர் வீணாகி வருகிறது.
இதன் காரணமாக சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த பள்ளத்தில் சிக்கி கொள்ளும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மொபட்டில் வந்த ஒரு பெண் கீழே விழுந்து காயமடைந்தார்.
எனவே, ஏதாவது உயிர்பலி ஏற்படும் முன் குழாய் உடைப்பை சரிசெய்து, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story